புரட்சிக்கான காரணங்கள்

தென்னிந்திய புரட்சி மக்களிடையே இருந்த ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான வெறுப்பின் வெளிப்பாடாக அமைந்தது. கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதும், அவரின் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதும் தென்னிந்திய புரட்சியை தவிர்க்க முடியாததொன்றாக்கியது.

தென்னிந்திய புரட்சி மக்களிடையே இருந்த ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான வெறுப்பின் வெளிப்பாடாக அமைந்தது. கட்ட பொம்மன் தூக்கிலிடப்பட்டதும், அவரின் உறவினர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதும் தென்னிந்திய புரட்சியை தவிர்க்க முடியாததொன்றாக்கியது.

மருது சகோதரர்கள்

19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராக மருது சகோதரர்கள் கலகம் செய்தனர். மருது சகோதரர்கள் மூக்கையா பழனியப்பன் மற்றும் பொன்னாத்தாள் தம்பதியரின் மகன்களாவர். 

Also Read : தமிழகத்தில் நீதிக்கட்சி உருவான வரலாறு!!!

மூத்த சகோதரர் பெரிய மருது என்றும், இளையவர் சின்ன மருது என்றும் அழைக்கப்பட்டனர். சின்ன மருது 'மருது பாண்டியன்' என்றும் 'சிவகங்கைச் சிங்கம்' என்றும் அழைக்கப்பட்டார். இவரே தென்னிந்திய புரட்சியின் கதாநாயகன் ஆவார். சின்ன மருது சிவகங்கையை ஆண்ட முத்து வடுகநாத தேவரிடம் பணியாற்றினார். 1772-ஆம் ஆண்டு சிவகங்கையை ஆற்காடு நவாப் கைப்பற்றினார். எனினும் சில மாதங்களுக்குப் பிறகு சிவகங்கை மருது சகோதரர்களால் கைப்பற்றப்பட்டு, பெரிய மருது அதன் மன்னராக நியமிக்கப்பட்டார்.

கட்டபொம்மன் இறந்தபின் அவரது சகோதரர் ஊமைத்துரை மருதுபாண்டியர்களிடம் ஆதரவையும் பாதுகாப்பையும் பெற்றார். இதனால் கோபம் கொண்ட ஆங்கிலேயர் சிவகங்கை மீது போர் தொடுத்தனர். ஆங்கிலத் தளபதி "அக்னியூ” தலைமையில் பெரும்படை மருதுபாண்டியருக்கு எதிராக அனுப்பப்பட்டது. நிலைமையின் உக்கிரத்தை உணர்ந்த மருதுபாண்டியர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டு இந்தியர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒன்றிணைக்க முயன்றார்.

சாதி, சமய வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட மக்களுக்கு அழைப்புவிடுத்தார். 1801-ஆம் ஆண்டு ஜூன் மாதம், சின்ன மருது ஆங்கிலேயருக்கு எதிராக பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். இதுவே திருச்சி பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரகடனத்தின் பிரதிகள் திருச்சியிலுள்ள நவாப்பின் அரண்மனைச் சுவரிலும், ஸ்ரீரங்கம் விஸ்வநாத ஆலயச் சுவரிலும் ஒட்டப்பட்டன. இந்த 1801 பிரகடனம், ஆங்கிலேயருக்கு எதிராக அனைத்து இந்தியர்களை ஒருங்கிணைத்த முதல் பிரகடனமாகும்.

இப்பிரகடனத்தின் விளைவாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு எதிராக போராட அணிதிரண்டனர். ஆனால் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை பாளையக்காரர்களின் படையை பிரித்தது. கி.பி.1801-ஆம் ஆண்டு மே 29-ஆம் நாள் புரட்சியாளர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போர் மூண்டது. புரட்சியாளர்கள் திண்டுக்கல், இராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

காளையர் கோவில் அருகே நடந்த சண்டையில் மருது சகோதரர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது மருதுபாண்டியர் சிங்கப்புனரி காட்டில் மறைந்து கொண்டனர். துரதிஷ்டவசமாக மருதுபாண்டியர், புதுக்கோட்டை மன்னரால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இறுதியில் 1801-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் கோட்டையில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர். ஊமைத்துரை நவம்பர், 16, 1801-ஆம் ஆண்டு கழுவேற்றப்பட்டார். இவ்வாறு புரட்சி எதிர்பாராத விதமாக வெற்றியை பெற தவறியது.

வேலூர் புரட்சி

1806-ஆம் ஆண்டு அப்போதைய சென்னை ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனுமதியோடு, படைத்தளபதி சர்ஜான் கிரடாக் தலைப்பாகையுடன் கூடிய புதிய சீருடைய அறிமுகப்படுத்தினார். தளபதி அக்னியூ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தலைப்பாகை ஐரோப்பிய தொப்பியைப் போலவே இருந்தது. காதணிகளை அணிவதும், சமயச் சின்னங்களை இட்டுக் கொள்வதும் தடை செய்யப்பட்டன.

மேலும் சிப்பாய்கள் தங்களது முகத்தை நன்றாக மழித்து, மீசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் இந்த புதிய விதிமுறைகள் தங்களது சமய மற்றும் சமூகப் பழக்க வழக்கங்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக சிப்பாய்கள் கருதினர். ஜான் கிராடக் அறிமுகப்படுத்திய ராணுவ சீர்திருத்தங்களே வேலூர் புரட்சிக்கு வித்திட்டது. வேலூர் கலகம் வெடிக்கும் முன்பே, இந்திய சிப்பாய்கள் தங்களது எதிர்ப்புகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தனர். 1806 மே திங்களில் வேலூர் படையின் ஒரு பிரிவினர் புதிய விதியை எதிர்த்தனர்.

Also Read : இந்திய மாநிலங்களின் மறுசீரமைப்பு!!!

1806-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி முதல் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் முஸ்தபா பெக் தன்னுடைய உயர் அதிகாரியான கர்னல் போர்ப்ஸிடம் ஐரோப்பிய இராணுவ அதிகாரிகளையும், துருப்புகளையும் பூண்டோடு ஒழிப்பதற்கான இரகசியதிட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்தார். ஆனால் இச்செய்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

வேலூர் கலகம் உருவாகுவதற்கு முன் திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர் மராத்திய மற்றும் பிரெஞ்சு உதவியுடன் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்க முற்பட்டார். பதே ஹைதர் இரகசிய தகவல்களை முகமது மாலிக் என்பவர் வாயிலாகப் பெற்றார். குறிப்பாக வேலூர் இராணுவப் புரட்சிக்கு பதே ஹைதர் மற்றும் மொய்சுதீன் ஆகிய இருவரும் இணைந்து திட்டம் தீட்டினர்.

திப்புவின் மகளின் திருமண நிகழ்ச்சி ஜூலை 9, 1806-ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் சிப்பாய்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஜூலை 10-ஆம் நாள் விடியற்காலை முதல் மற்றும் 23-ஆம் படைப்பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர். இப்படைப் பிரிவுகளின் இராணுவ அதிகாரி கர்னல் பான்கோர்ட் இக்கலகத்திற்கு முதல் பலியானார். 23- ஆம் படைப்பிரிவின் அதிகாரியான கர்னல் மிகேரஸ்

அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார். வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் இராணிப்பேட்டைக்கு விரைந்து சென்று அங்கிருந்த இராணுவ தளபதி கர்னல் கில்லஸ்பியிடம் காலை 7 மணியளவில் வேலூர் புரட்சியைப் பற்றி தெரிவித்தார். சுமார் காலை 9 மணியளவில் கில்லஸ்பி இராணுவப் படையுடன் வேலூர் கோட்டையை அடைந்தார்.

இதற்கிடையில் கிளர்ச்சியாளர்கள் திப்பு சுல்தானின் மூத்த மகன் பதேஹைதரை புதிய சுல்தானாக அறிவித்தனர். மேலும் கோட்டையில் திப்புசுல்தானின் புலிக்கொடியை பறக்கவிட்டனர். இக்கிளர்ச்சி கர்னல் கில்லஸ்பியினால் உடனடியாக அடக்கப்பட்டது. வேலூர் புரட்சி தோல்வியில் முடிவடைந்தது. இந்திய வீரரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திப்புவின் குடும்பத்தினர் கல்கத்தாவிற்கு அழைத்து செல்லப்பட்டு ஆறு வருடங்களுக்கு மேலாக அங்கு சிறையில் அடைக்கப்பட்டனர். 1857-ஆம் ஆண்டு நடைப்பெற்ற முதல் இந்திய சுதந்திரப் போருக்கு வேலூர் கலகம் முன்னோடி என்று சவார்க்கர் கருதுகின்றார். இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்று என்.சஞ்சீவி கூறியுள்ளார்.

காலனியாதிக்கத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர் கலகம் என்று கே.ராசய்யன் என்ற வரலாற்று அறிஞர் கூறுகிறார். வேலூர் கலகம் 1857-ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்துக்கு வழிவகுத்தது என்ற கூற்றை கே.கே.பிள்ளை என்ற வரலாற்று ஆசிரியர் மறுக்கிறார்.

Also Read : திருவண்ணாமலை மாவட்டத்தின் வரலாறு!!!

Previous Post Next Post