மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு, அந்நாட்டில் வாழும் மக்களே மிகப்பெரிய வளமாகும். ஒரு பகுதியில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கையே மக்கள் தொகை எனப்படுகிறது. மக்கள் தொகை குறித்த பாடங்களைப் படிப்பதை மக்கள் புவியியல் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் "டெமோகிராபி” (demography) என்கின்றனர்.
இந்தியாவில் மக்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், எழுத்தறிவு மற்றும் கல்வியறிவு, உறைவிட விவரம், நகரமயமாக்கம், பிறப்பு மற்றும் இறப்பு விகிதங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மொழி, மதம், இடம்பெயர்ந்தோர், மாற்றுதிறனாளிகள் போன்றவை பற்றிய விவரங்களை சேகரிக்க அரசாங்கத்தால் எடுக்கப்படும் நடவடிக்கையே மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.
அரசு நிறுவனமான மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகையைப் பற்றிய முழு விவரங்களையும் சேகரித்து, பட்டியலிட்டு, புள்ளி விவரங்களை வெளியிடுகிறது.
இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியானது முதன் முதலாக 1872-ஆம் நடைபெற்றது. அதன் பிறகு 1881 - இல் நடைபெற்றது. அதிலிருந்து ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2011-இல் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பானது இந்தியாவின் 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும். மேலும் இது சுதந்திரத்திற்கு பிறகு நடைபெறும் 7-ஆவது கணக்கெடுப்பாகும். "நமது சென்சஸ்” “நமது எதிர்காலம்" என்பதே இந்த (2011) கணக்கெடுப்பின் முத்திரை வாசகமாகும்.
நமது குடியரசுத் தலைவர் திருமதி.பிரதீபாபாட்டீல் அவர்கள் இந்த 2011 கணக்கெடுப்பை ஏப்ரல் 1, 2010 அன்று தொடங்கிவைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு நாள் - பிப்ரவரி 9 ஆகும்.
முதன் முதலாக "தேசிய மக்கள்தொகை பதிவேடு” தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படுவது இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் சிறப்பு அம்சமாகும். இதன் மூலம் உலகிலேயே தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தயாரிக்கும் முதல் நாடாக இந்தியா விளங்குகிறது.
தேசிய அளவில் இந்த கணக்கெடுப்பானது இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக 2010 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கிடும் பணியானது 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற்றது. தமிழகத்தில் முதல் கட்டமாக 2010 ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதே காலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கான (NPR) விவரங்களும் சேகரிக்கப்பட்டன. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கிடும் பணியானது 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற்றது.
இந்த 2011-கணக்கெடுப்பின்படி மார்ச் 1, 2011 அன்று 00.00 நேரப்படி இந்தியாவின் மக்கள்தொகை 1,21,01,93,422 ஆகவும் அதே நேரப்படி தமிழகத்தின் மக்கள் தொகை 7,21,38,958 ஆகவும். பதிவுசெய்யப்பட்டுள்ளது.
2011 கணக்கெடுப்பின் இடைக்கால விவரங்களை இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் சி.சந்திரமௌலி 2011 மார்ச் 21 அன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோ.பாலகிருஷ்ணன், இடைக்கால விவரங்களை சென்னையில் வெளியிட்டார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையடுத்து இந்திய அரசு, சுதந்திரத்திற்கு பிறகு முதன் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானித்துள்ளது. இதற்கு முன்பு இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1931-இல் ஜாதிவாரி கணக்கெடுப்பு செய்யப்பட்டது.
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு 1968-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் (மார்க்சிய பொதுவுடைமை கட்சியின் ஆட்சியில் இ.எம்.எஸ். நம்பூதிரிபட் முதலமைச்சராக இருந்தபோது) மக்களின் சமூக நிலைய அறிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அறிக்கை 1971-ஆம் ஆண்டு கேரள மாநில அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை 2011 கணக்கின்படி 121,01,93,422 கோடியாக உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2011 கணக்கின்படி 7,21,38,958 கோடியாக உள்ளது, இது இந்திய அளவில் மக்கள் தொகை கணக்கின்படி தமிழ்நாடு ஏழாவது இடத்தில் உள்ளது.