தமிழகக் கல்வி வளர்ச்சி

“கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாரதியார் தமிழ் நாட்டை கல்வியில் சிறந்த நாடு என போற்றுகின்றார். பண்டைய தமிழ் கல்வி முறை குருகுல வாசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சங்ககால மன்னர்கள் கல்வியை ஊக்குவித்தனர்.

பண்டைய காலத்தில் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் மரத்தின் நிழலில் அல்லது கோயில்களில் செயல்பட்டன.

பண்டைய காலத்தில் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் மரத்தின் நிழலில் அல்லது கோயில்களில் செயல்பட்டன. மேல்நிலைக் கல்விக் கூடங்கள் மடங்கள், பள்ளிகள் அல்லது விகாரங்கள் எனப்பட்டன.

பல்லவர்கள் காலத்தில் கல்வித்துறையில் முன்னேற்றம் காணப்பட்டது. பாண்டியர் காலத்தில் கல்வி நிலையங்கள் சாலைகள் என்று அழைக்கப்பட்டன. தமிழ்நாட்டில் முதன் முதலில் மேலைநாட்டுக் கல்வி முறையை அறிமுகப்படுத்திய பெருமை கிறித்துவ சங்கங்களையேச் சாரும். 

16-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக சமயத் தொண்டினை ஆரம்பித்தனர். சமயத் தொண்டிற்காக அவர்கள் "ஏசு சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

ஏசு சங்க பாதிரிமார்களுள் அருட்தந்தை பெர்ணான்டஸ் முக்கியமானவர். இவர் புன்னக்காயல் என்ற இடத்தில் ஒரு தேவாலயத்தையும் பள்ளியையும் நிறுவினார்.

மதுரை சமயப்பரப்புக் குழு கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கதாகும். சிறந்த அறிவாற்றல் கொண்ட ராபர்ட் - டி- நொபிலி என்ற பாதிரியார் 1606-ஆம் ஆண்டு முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வருகை புரிந்தார்.

வீரமாமுனிவர் என்று அழைக்கப்பட்ட கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி மதுரை சமய பரப்புக்குழுவில் 1711-ஆம் ஆண்டு முதல் 1742-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.

ஆற்காடு சமய பரப்புக்குழு 1853-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்கட்டர் சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளையும், பள்ளிகளையும் நிறுவி அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.

இக்னேசியஸ் லயோலா என்ற சமய பரப்புக்குழு சென்னையில் லயோலா கல்லூரியை நிறுவியது. தமிழ்நாட்டில் அரேபிய மற்றும் பாரசீகக்கல்வி முறை மதராசாக்களின் மூலம் பரப்பப்பட்டது. 

ஆங்கிலேயர் வருகைக்கு பின் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி :

1813-ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின்படி இந்தியாவில் மேலை நாட்டுக் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியை ஆங்கிலேய பாராளுமன்றம் ஒதுக்கியது. 1819-ஆம் ஆண்டு பள்ளிக்கூட புத்தக சங்கம் (School book Society) தொடங்கப்பட்டது.

1820-ஆம் ஆண்டு சென்னை மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட சர். தாமஸ் மன்ரோ கல்வி திட்டங்களுக்காகச் செலவிடப்படும் தொகை என்றும் அழிவில்லாதது என்று வாதிட்டார். 

சர். தாமஸ் மன்றோவின் முயற்சியினால் சென்னை மாகாணத்தில் ஏறத்தாழ 70 பள்ளிகள் நிறுவப்பட்டன. 1822-ஆம் ஆண்டு கல்விக் குழு (Education Commission) ஒன்று அமைக்கப்பட்டது. 

பொதுக்கல்வி வாரியம் (Board of Public Instruction) ஒன்று அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகள் நிறுவப்பட்டன. 1823-ஆம் ஆண்டு பொதுக்கல்வி இயக்குனரகம் (Directorate of Public Instruction) அமைக்கப்பட்டது. ஏ.ஜே. அரபுத்நாத் என்பவர் அதன் முதல் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

1830-ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி கீழ்நோக்கி பரவும் திட்டத்தை (Filtration Theory) அறிமுகப்படுத்தியது. இத்திட்டப்படி கல்வியானது சமுகத்தின் மேல் மட்ட மக்களுக்கு மட்டும் முதலில் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தாம் பெற்ற கல்வி அறிவை பொது மக்களுக்கு வழங்க வேண்டும்.

ஆனால் இத்திட்டப்படி கல்வி மேல் மட்ட மக்களிடமிருந்து பொது மக்களை சென்றடையாத காரணத்தினால், இது தோல்வியில் முடிவடைந்தது. சென்னை மருத்துவக் கல்லூரி 1835-ஆம் ஆண்டும், சென்னை மாநிலப்பள்ளி 1836-ஆம் ஆண்டும், சென்னை கிருத்துவப்பள்ளி 1840-ஆம் ஆண்டும். சென்னை பச்சையப்பன் பள்ளி 1841-ஆம் ஆண்டும் தொடங்கப்பட்டன. 1835-இல் சென்னை ஓவியக் கல்லூரியும் 1851-இல் சென்னை மாநிலக்கல்லூரியும் தொடங்கப்பட்டன.

1835-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை மருத்துவப்பள்ளி 1851-ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியாக வளர்ந்தது. சென்னையில் தொடங்கப்பட்ட நில அளவைப்பள்ளி, 1857-ஆம் ஆண்டு பொறியியல் கல்லூரியாக வளர்ந்தது.

1854-இல் வெளியிடப்பட்ட சார்லஸ் உட் அறிக்கை கல்வி வளர்ச்சியின் மகா சாசனம் என்று அழைக்கப்படுகிறது. 1857-ஆம் ஆண்டு லண்டன் கலைக்கழக மாதிரியில் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 

1882-ஆம் ஆண்டு கல்வி வளர்ச்சியை ஆராய அமைக்கப்பட்ட ஹண்டர்குழு, ஆரம்பக்கல்வி பெருமளவில் புறக்கணிக்கப் பட்டுள்ளதை கண்டுபிடித்தது. இக்குழு கல்விப் பொறுப்பை நகராட்சி மற்றும் மாவட்ட மையங்களிடம் பிரித்துக் கொடுக்க சிபாரிசு செய்தது.

சென்னையின் ஆளுநராக இருந்த கன்னிமாரா பிரபு 1890-ஆம் ஆண்டு பொது நூலகத்தை உருவாக்கினார். 1891-ஆம் ஆண்டு சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்கப்பட்டது.

1929-ஆம் ஆண்டு அண்ணாமலைச் செட்டியாரால் சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. 1935-ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சர்.ஜான். சார்ஜண்டின் ஆலோசனைப்படி 6 முதல் 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு இலவச கட்டாயக் கல்வி வழங்கப்பட்டது. 1953-இல் இராஜாஜி குலக்கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். 1965-ஆம் ஆண்டு தமிழகத்தில் மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் 1970-ஆம் ஆண்டு 'தமிழ்' பயிற்றுமொழியாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக அரசு 1978-இல் தொழிற்கல்வியை அறிமுகப்படுத்தியது. 1978-ஆம் ஆண்டு தமிழகத்தில் 10 +2 +3 எனும் கல்வி முறை அமலுக்கு வந்தது.

குறிப்பு : 

அடிப்படை உரிமையானது ஆரம்பக் கல்வி :

1948-ஆம் ஆண்டு டாக்டர்.இராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கப்பட்டது. 1953-ஆம் ஆண்டு டாக்டர் ஏ.லட்சுமண முதலியார் தலைமையில் இடைநிலைக் கல்விக்குழு அமைக்கப்பட்டது. 

1948-ஆம் ஆண்டு டாக்டர்.இராதாகிருஷ்ணன் தலைமையில் பல்கலைக்கழக மானியக்குழு அமைக்கப்பட்டது.

1964-ஆம் ஆண்டு டாக்டர்.டி.எஸ்.கோத்தாரி தலைமையில் தேசிய கல்விக்குழு அமைக்கப்பட்டது. இது கோத்தாரி கல்விக்குழு என அழைக்கப்பட்டது. 

இதன் பரிந்துரைப்படி 10 + 2+ 3கல்விமுறை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1986-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட “புதிய கல்விக்கொள்கை'' மனித வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.

1992-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட "தேசியக் கல்விக் கொள்கை'' பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக "கரும்பலகைத்திட்டத்தை'' அறிமுகப்படுத்தியது.

இந்தியாவில் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் அரசியல் சாசனத்தின் 86-ஆவது சட்ட திருத்த மசோதா 2002-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாகிறது.

அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை அளிப்பதற்கான சட்டம் 2009-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இவ்விரு சட்டங்களும் 2010-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தன. இதனால் இந்தியாவில் உள்ள 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமையாகும்.

Previous Post Next Post