தமிழ்நாட்டில் இசை கலை உருவான வரலாறு

முத்தமிழில் நடுநாயகமாக விளங்குவது இசைத்தமிழே. இசை என்றால் புகழ் என்ற பொருளும் உண்டு. மக்களின் கலாச்சார வாழ்வில் இசை முக்கிய பங்கு வகிக்கிறது.

நமக்கு கிடைத்துள்ள தொன்மையான இசை நூல் பரிபாடல்.

தமிழிசையின் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பவையே கர்நாடக சங்கீதத்தின் ஷட்ஜமம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் எனும் ஸரி கம பத நி ஆயின.

முத்தமிழில் நடுநாயகமாக விளங்குவது இசைத்தமிழே. இசை என்றால் புகழ் என்ற பொருளும் உண்டு.

பஞ்ச பாரதீயம், இசை நுணுக்கம், பஞ்சமரபு, பதினாறுபடலம், வாய்ப்பியம், இந்திரகாளியம் முதலிய இசைநூல் இருந்தமை பற்றி உரையாசிரியர்கள் மூலமாக அறிகிறோம், இவற்றின் சூத்திரங்கள் ஒன்றிரண்டு கிடைக்கின்றன. தேவாரம், திருவாசகம் போன்றவை பண்ணோடு கூடிய இசை நூல்களே.

மகேந்திரவர்ம பல்லவன் குடுமியான் மலையில் வட மொழியில் தமிழிசையின் பற்றிய கல்வெட்டு ஒன்றை செதுக்கியுள்ளான். தமிழில் செய்யுள்களுக்கும் ராகம் உண்டு. அவற்றை ராகத்தோடுதான் பாட வேண்டும், வெண்பா - சங்கராபரணம், ஆசிரியப்பா -தோடி, கலிப்பா பந்துவராளி, விருத்தம்- - கல்யாணி, காம்போதி, மத்தியமாவதி முதலிய ராகங்களில் பாடவேண்டும்.

வாய்ப்பாட்டில் மட்டுமின்றி கருவிகள் இசைப்பதிலும் தமிழர் சிறந்து விளங்கினர். இன்று வடநாட்டில் பிரபலமாக இருக்கும் சாரங்கி தமிழ்நாட்டிலிருந்து சென்றதே.

நாகூர், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் வாழ்ந்த நாகர் எனும் தமிழிசை மரபினர் நாதசுரத்தை முதலில் பயன்படுத்தினார். இது கி.பி.17ஆம் நூற்றாண்டில் புழக்கத்திற்கு வந்தது.

சோழர் காலத்திற்குப்பின் தமிழிசை வளர்ச்சியில் சிறிது பின்னடைவு உண்டாயிற்று. தமிழகம் விஜயநகர, நாயக்க, மராட்டிய மன்னர்களின் ஆளுகைக்குட்பட்டது.

அவர்தம் தாய்மொழி தெலுங்கு, மராத்தி, ஹிந்தி என்றிருந்ததால், தமிழ் மொழிப்பாடல்கள் ஆதரிப்பார் இன்றி தெலுங்கு, கன்னடம், வடமொழி, மராத்தி, இந்தி மொழிப் பாடல்கள் ஆதிக்கம் பெற்றன.

அவை தமிழ் இசை மரபை ஒட்டிப் பாடப்பட்டு கர்நாடக சங்கீதம் என்று பெயர் பெற்றன.

அக்காலத்தில் வாழ்ந்த மாரிமுத்து பிள்ளை, அருணாசலக் கவிராயர் முதலியோர் தமிழ் கீர்த்தனைகளை இயற்றினாலும், அவை ஆதரிப்பாரின்றி இருந்தன.

புரந்தரதாசர் முதன்முதலில் பயிற்சிக்கான உருப்படிகளைச் செய்தார். எனவே இவரைக் கர்நாடக சங்கீதத்தின் பிதாமகர் என்றழைக்கின்றனர்.

சங்கீத மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் தெலுங்கு மற்றும், வடமொழியில் பல பாடல்கள் இயற்றி சங்கீதத்திற்கு மெருகூட்டினர்.

இவர்களையடுத்து வந்தவர்களான கோபால கிருஷ்ண பாரதியார், வேதநாயகம் பிள்ளை, இராமலிங்க அடிகள், நீலகண்ட சிவன் முதலியோர் தமிழ்ப்பாடல்கள் இயற்றினர்.

இருபதாம் நூற்றாண்டில் கோடீசுவர ஐயர், பாபநாசம் சிவன், மகாகவி பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், ஆகியோர் தமிழிசைப் பாடல்களை இயற்றினர்.

எனினும் தமிழிசைப் பாடல்கள் சங்கீத மும்மூர்த்திகளின் பாடல்களுக்கு இருந்த செல்வாக்கால், மேடைகளில் முக்கிய இடம் பிடிக்காமல் இருந்தன.

குறிப்பு :

கர்நாடக இசை மேதைகள் பெயர் மற்றும் பிறந்த இடம்

சியாமா சாஸ்திரிகள் (1762-1827) - திருவாரூர்

தியாகராஜ சுவாமிகள் (1767-1847) - திருவாரூர்

முத்துசுவாமி தீட்சிதர் (1775-1834) - திருவாரூர்

தமிழிசையையும், அது தொடர்பான கலைகளையும் வளர்க்க 1932-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் சர்.அண்ணாமலை செட்டியார் தமிழிசைக் கல்லூரியை துவக்கினார். இவர் 1943-ஆம் ஆண்டு சென்னையில் தமிழிசைச் சங்கத்தை நிறுவினார்.

தமிழ்நாட்டின் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் கீர்த்தனைகள் பாடியவர் என்ற பெருமைக்குரியவராவார்.

தமிழ்நாட்டில் நடனக் கலை உருவான வரலாறு

தமிழ்நாட்டின் தொன்மையான நடனம் பரத நாட்டியம் ஆகும். கி.மு.400-ஆம் ஆண்டில் பரத முனிவரால் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரம் என்ற நூலிலிருந்து பரதநாட்டியம் தோன்றியது.

நடனக்கலைகளிலே மிகவும் பழமையானதும் சிறப்பானதும் பரதநாட்டியம் ஆகும். இது பரத முனிவரால் எழுதப்பட்டதால் அவரது பெயரிலேயே

பரதநாட்டியம் என்று பெயர் பெற்றது.

பரதம் என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களில், 

'ப' என்பது பாவனை (அ) அபிநயம் மற்றும் வெளிப்பாடு

'ர' என்பது ராகத்தை (அ) இசையையும்

'த' என்பது தாளத்தையும் குறிப்பிடுகின்றது. 

இதுவே பரதம் எனப்படுகிறது.

பரத நாட்டியம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தது எனக் கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் சிதம்பரம் கோயிலில் "நாட்டியாஞ்சலி' எனப்படும் பரதநாட்டிய விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

நுண்கலைகளை வளர்ப்பதற்கென்றே 1963-ஆம் ஆண்டில் தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றம் என்ற ஒன்றை துவக்கி, அனைத்து கலைகளையும் வளர்த்து வருகின்றது.

பரதநாட்டியத்தை வளர்ப்பதற்கென்றே ருக்மணிதேவி அருண்டேல் என்பவரால் கலாஷேத்ரா என்ற நிறுவனம் சென்னையில் துவக்கப்பட்டுள்ளது.

பரத நாட்டியத்தை கற்று அதற்கு சிறப்பு செய்தவர்களுள் பத்மினி, பத்மாசுப்பிரமணியம், வைஜெயந்தி மாலா, சித்ரா விஸ்வேஸ்வரன், சுதாராணி, சோபனா மற்றும் பலர் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.

தமிழ்நாட்டின் கிராமிய நடனங்கள் :

கோலாட்டம், பின்னல் கோலாட்டம், கரகம், காவடி, கும்மி, பொய்க்கால் குதிரை, மயில் ஆட்டம், ஒயிலாட்டம் போன்றவை தமிழ்நாட்டின் கிராமிய நடனங்களாகும்.

Previous Post Next Post