1. ஆலம்பரை கோட்டை

இது மாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடப்பாக்கம் என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டில் மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது.

இது மாமல்லபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடப்பாக்கம் என்ற கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது 17-ஆம் நூற்றாண்டில் மொகலாயர் காலத்தில் கட்டப்பட்டது.

2. அறந்தாங்கி கோட்டை

இது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமைந்துள்ளது. இந்தக்கோட்டை கி.பி.16 அல்லது 17-ஆம் நூற்றாண்டில் தொண்டைமான்களால் கட்டப்பட்டதாகும்.

3. திண்டுக்கல் கோட்டை

திண்டுக்கல் நகரின் மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோட்டை முன்பு “திண்டுக்கல் மலைக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. 1605-ஆம் ஆண்டு மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை பின்னர் 18-ஆம் நூற்றாண்டில் மைசூர் மன்னர்கள் வசமானது. மைசூரை ஆண்ட ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் காலத்தில் இது முக்கிய கோட்டையாகத் திகழ்ந்தது.

4. ஜெல்டிரியா (அல்லது) ஜெல்டாரியா கோட்டை

இது டச்சு கிழக்கிந்திய கம்பெனியால் 1613-ஆம் ஆண்டு பழவேற்காடு (Pulicate) என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது. பழவேற்காடு இந்தியாவில் டச்சுக்காரர்களின் முதலாவது இருப்பிடமாகும்.

இக்கோட்டை தற்போது இந்தி தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுவே இந்தியாவில் டச்சுக்காரர்களின் வலுவான கோட்டையாக விளங்கியது. மற்றவையெல்லாம் வணிக மையங்களாக இருந்தன.

5. செஞ்சிக்கோட்டை

தமிழகத்தில் எஞ்சியிருக்கும் மிகச்சில கோட்டைகளுள் ஒன்றான செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ளது. "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்த கோட்டை” என்று மராட்டிய மன்னன் சிவாஜி பாராட்டுமளவுக்கு, நன்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக விளங்கியது. ஆங்கிலேயர் இதனை கிழக்கின் 'ட்ராய்' என்று அழைத்தனர்.

9-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் ஆட்சிக் காலத்தில் செஞ்சியில் சிறிய கோட்டை கட்டப்பட்டது. பின்னர் 13-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கோட்டை விரிவாக்கப்பட்டது.

6. மனோரா கோட்டை

நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் 'மனோரா' என்ற நினைவுச் சின்னத்தைக் கட்டினார். இது தஞ்சைமாவட்டம் மல்லிப்பட்டினம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

230 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரம் 8 அடுக்குகளில் அறுகோண வடிவில் அமைந்துள்ளது. இது மினாரட் (Minaret) என்ற சொல்லிலிருந்தே 'மனோரா' என்ற பெயரைப் பெற்றுள்ளது.

7. ராஜகிரி கோட்டை

கி.பி.1200-இல் கட்டப்பட்ட ராஜகிரி கோட்டை செஞ்சியில் அமைந்துள்ளது. ராஜகிரி என்ற சொல்லுக்கு அரசன் மலை என்று பொருள்.

8. ரஞ்சன்குடி கோட்டை

17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை பெரம்பலூர் நகருக்கு வடக்கே 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது கர்நாடக நவாப்புக்கு கட்டுப்பட்ட சிற்றரசரால் கட்டப்பட்டது. 

இங்குதான் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் சந்தா சாகிப்புக்கும் இடையே 1751 -ஆம் ஆண்டு வலிகொண்டா போர் நடைபெற்றது.

9. சங்ககிரி கோட்டை

15-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் கொங்கு நாட்டின் வரிகளை சேமிக்கும் இடமாக விளங்கியது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்.

10. புனித டேவிட் கோட்டை

இது சோழமண்டலக் கடற்கரையில் கடலூருக்கு அருகில் அமைந்துள்ள ஆங்கிலேயர் கோட்டையாகும். கி.பி.1690-ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி இக்கோட்டையை மராட்டியர்களிடமிருந்து வாங்கியது.

கி.பி.1746-இல் இக்கோட்டை தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் குடியிருப்புகளின் தலைமையிடமாக விளங்கியது. கி.பி.1756-இல் இராபர்ட் கிளைவ் இக்கோட்டையின் ஆளுநராகப் பதவி வகித்தார்.

11. புனித ஜார்ஜ் கோட்டை

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கட்டிய முதலாவது கோட்டை புனித ஜார்ஜ் கோட்டையாகும். இது 1639 ஆம் ஆண்டு அன்றைய கடற்கரையோர நகரமான மதராசில் (இன்றைய சென்னை) கட்டப்பட்டது.

புனித ஜார்ஜ் நாளான ஏப்ரல் சென்னை 23-ஆம் தேதி கட்டி முடிக்கப்பட்டதால், இதற்கு "புனித ஜார்ஜ் கோட்டை' எனப் பெயரிடப்பட்டது.

12. திருமயம் கோட்டை

40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நகரில் அமைந்துள்ளது. இது இராமநாதபுரம் மன்னர், விஜயரகுநாத சேதுபதி என்பவரால் கி.பி.1687-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

13. உதயகிரி கோட்டை

இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் நகரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தொடக்கத்தில் கி.பி.1600 - களில் திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோட்டை, 18-ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மனால் மீண்டும் கட்டப்பட்டது. இது தற்போது தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

14. வட்டக்கோட்டை

வட்ட வடிவில் இருக்கும் இக்கோட்டை கன்னியாகுமரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோட்டை 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

15. வேலூர் கோட்டை

16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியின்போது சின்ன பொம்மி நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோட்டை வேலூர் நகரில் அமைந்துள்ளது. 1806-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக இக்கோட்டையில் இந்திய சிப்பாய்கள் கலகம் செய்தனர்.

இக்கோட்டையில்தான் திப்புசுல்தான் குடும்பத்தினர் சிறை வைக்கப்பட்டிருந்தனர். மேலும் இலங்கையிலுள்ள கண்டி அரசின் கடைசி மன்னனான ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனும் இந்த கோட்டையில்தான் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

தமிழக தீவுகள்

Previous Post Next Post