ஓர் இடத்தில் ஒரு நாளில் நிலவும் தட்பவெப்ப நிலையை வானிலை என்கிறோம். ஓர் இடத்தின் நீண்டகால, அதாவது 30 வருடம் முதல் 150 வருடம் வரையிலான, சராசரி வானிலையை அந்த இடத்தின் காலநிலை என்கிறோம். தமிழ்நாட்டின் காலநிலை பொதுவாக அயன மண்டல காலநிலையைச் சார்ந்ததாகும்.

ஆண்டுக்கு இருமுறை சூரியனின் செங்குத்தான கதிர்கள் தமிழ்நாட்டில் விழும். தமிழ்நாட்டின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள் இரண்டு ஆகும். அவை,

1. சூரியனின் கதிர்கள் பூமியில் படும் கோணம்.

2. மழையைத் தருவிக்கும் பருவக் காற்றுகளினால் உண்டாகும் நேரடித் தாக்கம்.

தமிழ்நாட்டில் மே மாதம் வெப்பமிகு மாதமாகவும், ஜனவரி மாதம் குளிர் மிகுந்த மாதமாகவும் உள்ளது.

கோடை காலத்தின் அதிக வெப்பமான காலம் அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் எனப்படுகிறது. ஒப்பு ஈரப்பதம் கோடைக்கால மாதங்களை விட குளிர் காலத்தில் அதிகமாகவே உள்ளது.

மே மாதத்தில் காற்றின் சராசரி ஈரப்பதம் 68 சதவீதமாகவும், ஜனவரி மாதத்தில் 82 சதவீதமாகவும் உள்ளது.

வளிமண்டலத்தில் வெப்பநிலைக்கு ஏற்ப அழுத்தம், காற்று, மேகமூட்டம் மழைப்பொழிவு ஆகிய காலநிலைக் கூறுகளின் தன்மைகள் மாறுபடுகின்றன.

மேலும் அமைவிடம், நிலத்தோற்றம், கடல் அருகாமை (செல்வாக்கு) ஆகியவைகளும் ஒரு இடத்தின் காலநிலையை நிர்ணயம் செய்கின்றன. இந்தக் கருத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் காலநிலையை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.

1. வேனிற்காலம்

2. குளிர்காலம்

3. கார்காலம்

வேனிற்காலம் (வெயிற்காலம்)

1. இந்தியாவில் மார்ச் முதல் செப்டம்பர் வரை வேனிற்காலம் நிலவுகின்றது. தமிழ்நாடு கடகக் கோட்டிற்கு தெற்கேயும், புவியிடைக் கோட்டிற்கு (8°வ) அருகிலேயும் அமைந்துள்ளதால் மார்ச் மாதத்திலிருந்தே வெப்பம் அதிகரிக்க தொடங்குகின்றது.

2. மே மாதத்தில் தமிழ்நாட்டில் வெப்பநிலை 40°செ. வரை அதிகரிக்கின்றது. இந்திய நிலப்பரப்பும் படிப்படியாக வெப்பமடைந்து மே மாதத்தில் உச்சநிலையை அடைகிறது.

3. இந்தியாவில் வெப்பப் பரவல் தெற்கிலிருந்து, அதாவது தமிழ்நாட்டிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லச் செல்ல அதிகரிக்கின்றது.

4. தமிழ்நாடு வட அரைகோளத்தில் அமைந்துள்ளதால் ஓர் ஆண்டில் மார்ச் முதல் செப்டம்பர் வரை ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு சூரியனின் கதிர்கள் செங்குத்தாக தமிழக நிலப்பரப்பின் மேல் விழுகிறது.

இதனால் தமிழகத்தில் வேனிற்காலம் (மார்ச் முதல் செப்டம்பர் வரை) சிறிது நீண்டு உள்ளது.

5. சங்க காலத்தில் தமிழர்கள், சித்திரை முதல் புரட்டாசி மாதம் வரையிலான காலத்தை வேனிற்காலம் (வெயில் காலம்) என்றழைத்தனர்.

தமிழ்நாட்டின் பருவக் காலங்கள்

பருவங்கள்

கோடை (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை)

மழைக்காலம் (ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை)

குளிர்காலம் (டிசம்பர் முதல் ஏப்ரல் வரை)

தமிழ் பருவங்கள்

இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர் காலம், முன் பனி, பின் பனி

தமிழ் மாதங்கள்

சித்திரை, வைகாசி,ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, தை, மார்கழி, மாசி, பங்குனி.

தமிழ்நாட்டில் குளிர்காலம்

1. செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் சூரியன் புவியிடைக் கோட்டிற்கு தெற்கில் பிரகாசிக்கும். அப்போது தமிழக நிலப்பரப்பில் சூரியனின் கதிர்கள் சாய்வாக விழுகின்றன.

சாய்வான கதிர்கள் குறைந்த வெப்பத்தையே கொடுக்கும். ஆதலால் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை தமிழ் நாட்டில் வெப்பம் தணிந்து குளிரத் துவங்கும்.

2. செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வட அரைக்கோளத்தில் குளிர்காலமாகும். அதே வேளையில் தென் அரைக்கோளத்தில் வேனிற்காலமாக இருக்கும்.

3. வட அரைகோளத்தில் அமைந்துள்ள நமது இந்தியாவிற்கும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர் காலமாகும்.

4. தமிழ்நாடு புவியிடைக் கோட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால், வட இந்தியாவைப் போன்று மிகக் குளிராக இருக்காது.

5. மேலும் தமிழ்நாட்டை ஒட்டி நீண்ட கடற்கரை உள்ளது. பொதுவாக கடல் பரப்பு, நிலப்பரப்பை விட சிறிது வெப்பமாக இருக்கும். ஆதலால் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை போன்ற கடற்கரையோர மாவட்டங்கள் சிறிது வெப்பமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் கார்காலம்

தமிழ்நாட்டில் மழைபொழியும் காலம் கார்காலம் ஆகும். தமிழ்நாட்டில் மழைப்பொழிவு மூன்று காலக் கட்டங்களில் பெறப்படுகிறது.

1. தென்மேற்கு பருவக்காற்று மழைப்பொழிவு 

2. வடகிழக்கு பருவக்காற்று மழைப்பொழிவு

3. சூறாவளி மழைப்பொழிவு

1. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று மழைப்பொழிவு

தென்மேற்கு பருவக்காற்றின் மூலம் ஜுன் முதல் செப்டம்பர் வரை தமிழகம் மழையைப் பெறுகிறது. இதன் மூலம் தமிழகத்தின் தென்பகுதி பயன் பெறுகிறது.

நீலகிரி, கன்னியாகுமரி, கோவை மாவட்டத்தின் மேற்குப்பகுதி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் இம்மழைப் பொழிவால் பயனடைகின்றன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பகுதியில் இப்பருவமழை முதலில் தொடங்குவதால் அங்கு சராசரியாக 150 செ.மீ மழை பொழிகின்றது.

இப்பருவக்காற்று தென்மேற்கு திசையில் வீசுவதன் காரணமாக தமிழ்நாட்டின் கிழக்கு மற்றும் உட்பகுதிகள், இப்பருவ மழைக்கு மறைவுப் பிரதேசமாகிறது.

பொதுவாக மழையின் அளவு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி செல்லச் செல்ல குறைகிறது. அதிகபட்ச அளவாக 70 சதவீதம் மழை நீலகிரி மாவட்டத்திலும்,

அதனைத் தொடர்ந்து சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் அதிக அளவு மழையைப் பெறுகின்றன.

2. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவக்காற்று மழைப்பொழிவு

வடகிழக்கு பருவக்காற்றின் மூலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை தமிழகம் மழையைப் பெறுகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்கிறது.

இப்பருவக் காலத்தில் வடகிழக்குப் பருவக் காற்றும், சூறாவளியும் இணைந்தே மழைப்பொழிவைத் தருகின்றன.

இப்பருவ மழையினால் தமிழ்நாட்டின் கடலோர மற்றும் உள்நாட்டு சமவெளிப் பகுதிகள் அதிக மழையைப் பெறுகின்றன. இப்பருவ மழையின் போது கிழக்கிலிருந்து மேற்காக மழைப்பொழிவின் அளவு குறைகின்றது.

இப்பருவ மழையினால் கிழக்கு மாவட்டங்கள் அதிக மழைப் பொழிவையும், மத்திய மேற்கு மாவட்டங்கள் குறைவான மழைப் பொழிவையும், கன்னியாகுமரியைத் தவிர மற்ற கடற்கரை மாவட்டங்களான சென்னை, கடலூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருநெல்வேலி மாவட்டங்கள் 150 செ.மீ முதல் 200 செ.மீ வரை மழையைப் பெறுகின்றன. திருச்சிராப்பள்ளி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் 100 செ.மீ முதல் 150 செ.மீ வரை இப்பருவகாலத்தில் மழையைப் பெறுகின்றன.

3. தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு

தமிழ்நாட்டிற்கு நவம்பர் மாதம் சூறாவளி மழைப்பொழிவு மாதமாகும். வங்கக் கடலின் தென் பகுதியில் ஏற்படுகின்ற வளிமண்ட அழுத்த வேறுபாட்டினால் தாழ்வழுத்த பகுதி உண்டாகி, அது மேன்மேலும் தீவிரமடைந்து சூறாவளியாக மாறுகின்றது.

சூறாவளிகள் பருவகாலம் தொடங்குவதற்கு முன்பும் (ஏப்ரல்-மே) பருவகாலத்திற்கு பின்பும் (அக்டோபர் - டிசம்பர்) வங்கக் கடலிலும் அரபிக் கடலிலும் உருவாகின்றன. அவைகள் பெரும்பாலும் பருவகால தாழ்ச்சிகள் (Depressions) எனப்படுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை வங்கக்கடலில் எழுகின்ற சூறாவளிகளே அதிக சேதத்தை உருவாக்குகின்றன.

அதே சமயத்தில் இவை கடலோரப் பகுதிகளுக்கு அதிக மழையைத் தருவதால் அவை நலம் பயப்பனவாகவும் அமைகின்றன.

சித்திரை மாதம் தென்னிந்தியாவில் ஏற்படும் சுழற்காற்றை, சித்திரைச் சுழி என்பர்.

வடகிழக்கு பருவ மழையும், சூறாவளி மழைப்பொழிவும் சமமான அளவில் கடலோர மாவட்டங்களுக்கு மழைப் பொழிவைத் தருகின்றன.

உலகத்தில் பெரும்புயல் உருவாகும் இடங்கள்

1. வட அட்லாண்டிக் பெருங்கடல் 

2. பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதி

3. பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி 

4. பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி

5. இந்தியப் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதி

6. இந்தியப் பெருங்கடலின் தென்கிழக்குப் பகுதி 

7. இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதி

தமிழ்நாட்டின் பருவம் மற்றும் ஆண்டு மழைபொழிவு

தென்மேற்கு பருவ மழை - 22%

வட கிழக்கு பருவ மழை - 57 %

சூறாவளி மழைப்பொழிவு - 21%

தமிழகம் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவக்காற்றின் மூலமும் மழையைப் பெறுகிறது. வடகிழக்கு பருவக்காற்றின் மூலம்தான் தமிழகம் மிக அதிக மழையைப் பெறுகிறது.

தமிழகத்தில் மூன்று பருவக்காலங்களிலும் மழையைப் பெறும் மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டமாகும். கடலோர மாவட்டங்களும் நீலகிரி மாவட்டமும் ஆண்டிற்கு சுமார் 1400 மி.மீட்டருக்கு மேல் மழையைப் பெறுகின்றன.

ஆண்டின் மொத்த மழை அளவில் குறைந்த அளவு மழையை கோயம்புத்தூர் மாவட்டம் பெறுகின்றது.

தமிழ்நாட்டின் மழைமண்டலங்கள்

ஆண்டு மழைப் பொழிவின் அளவைக் கொண்டு தமிழ்நாட்டை ஐந்து மழை மண்டலங்களாகப் பிரிக்கலாம்.

மழை பொழிவின் பரவல் (2007-2008) மற்றும் அளவு அதன் மாவட்டங்கள் மிகக் குறைவான மழைப்பொழிவு - 800 மி.மீட்டருக்கு கீழ் - கோயம்புத்தூர்.

குறைவான மழைப்பொழிவு - 800 - 1000 மி.மீ வரை - நாமக்கல், கரூர்,தூத்துக்குடி, ஈரோடு, தருமபுரி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கிருஷ்ண கிரி.

மிதமான மழைப்பொழிவு - 1000-1200 மி.மீ வரை - புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தஞ்சாவூர், சேலம், இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, வேலூர். 

அதிக மழைப்பொழிவு - 1200 - 1400 மி.மீ வரை - திருநெல்வேலி, திருவண்ணாமலை, கன்னியாகுமரி.

மிக அதிக மழைப்பொழிவு - 1400 மி.மீட்டருக்கு மேல் - காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம். திருவள்ளூர், திருவாரூர், கடலூர். நாகப்பட்டினம், நீலகிரி.

தமிழர்களின் ஆறு பருவங்கள்

தமிழர்கள் அகப்பொருள் நிகழ்ச்சிக்குரிய பொழுதிணை பெரும்பொழுது சிறுபொழுது என இரண்டு வகையாகப் பிரித்தனர். ஓர் ஆண்டை ஆறு பெரும்பொழுதுகளாகவும், ஒரு நாளை ஆறு சிறுபொழுதுகளையும் பிரித்தனர்.

ஆறு பெரும் பொழுதுகள்

1. கார்காலம் - ஆவணி, புரட்டாசி (ஆகஸ்டு - அக்டோபர்

2. குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை (அக்டோபர் - டிசம்பர்)

3. முன் பனிக்காலம் - மார்கழி, தை (டிசம்பர் - ஏப்ரல்)

4. பின் பனிக்காலம் - மாசி, பங்குனி (பிப்ரவரி -ஏப்ரல்)

5. இளவேனிற்காலம் - சித்திரை, வைகாசி (ஏப்ரல் - ஜூன்)

6. முது வேனிற்காலம் - ஆனி, ஆடி (ஜூன் - ஆகஸ்ட்)

இராமமூர்த்தியின் வகைபாடு : 

பூனா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முனைவர் இராமமூர்த்தி, 1948 - இல் தமிழ் நாட்டின் காலநிலை பற்றியும், மழை பற்றியும் விரிவான ஆய்வு ஒன்றினை நிகழ்த்தினார். இவரது வகைப்பாட்டின்படி தமிழக காலநிலை,

வெப்பநிலைக் காலம் = மாசி - வைகாசி

தென்மேற்கு பருவக்காலம் = ஆனி - புரட்டாசி

திருப்பும் பருவகாலம் = ஐப்பசி - கார்த்திகை

குளிர் வானிலைக்காலம் = மார்கழி - தை

தமிழ்நாட்டு நாட்காட்டியைக் கொண்டு ஒரு வருடத்தினை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம்.

1. வறண்ட கால நிலை - ஜனவரி முதல் மார்ச் வரை

2. வெப்ப காலநிலை - ஏப்ரல் முதல் மே வரை

3. தென்மேற்குப் பருவ காலம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை

4. வடகிழக்குப் பருவ காலம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை

தமிழக கோட்டைகள் | Forts of Tamil Nadu 

Previous Post Next Post