உள்ளாட்சி அமைப்புகள்

பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. சோழர்களின் ஆட்சியில் கிராம சபைகள் சிறப்புற்று விளங்கியதையும், குடவோலை முறையில் தேர்தல்கள் நடைபெற்றதையும் நாம் உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் அறியலாம். தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அரசு முறை, “தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம் 1958 "-இன் படி ஏற்படுத்தப்பட்டது.

பழங்காலத்திலிருந்தே தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

இந்த முறையில் கிராம பஞ்சாயத்தானது அடிப்படை அமைப்பாக அமைந்துள்ளது. இதற்க மேலாக பஞ்சாயத்து ஒன்றியங்களும், மாவட்ட வளர்ச்சிக் குழுக்களும் உள்ளன. இந்தப் புதிய அமைப்பு முறையில் மாவட்ட கழகங்கள் (District Boards) அகற்றப்பட்டு பஞ்சாயத்து ஒன்றியங்கள் அவற்றின் வாரிசுகளாயின. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1958-இன் படி தமிழ்நாட்டிலுள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் அமைப்பானது பின்வருமாறு அமைந்துள்ளது.

1. பஞ்சாயத்துக்கள்

அ)கிராமப் பஞ்சாயத்துக்கள்

ஆ) நகரப் பஞ்சாயத்துக்கள்

2. பஞ்சாயத்து யூனியன்

3. மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் 

4. மாநில பஞ்சாயத்து அபிவிருத்தி கவுன்சில்

மேற்கூறப்பட்ட அமைப்புகள் அனைத்தும் 1994-ஆம் ஆண்டு வரையும், அதற்கு பிறகு புதிய பஞ்சாயத்து ராஜ் சட்ட அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறும் வரையும் வழக்கில் இருந்தன.

இந்தியாவில் தல சுய ஆட்சி

சுதந்திர இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பானது முதன் முதலாக 1959-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகூர் என்ற இடத்தில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களால் தொடங்கப்பட்டது. இரண்டாவதாக ஆந்திர மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

டிசம்பர் 24, 1996 - இல் பஞ்சாயத்து ராஜ் சட்டமானது பழங்குடியினர் அதிகம் வாழும் (பஞ்சாயத்துக்களை கொண்டுள்ள) 8 மாநிலங்களுக்கு (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிசா மற்றும் ராஜஸ்தான்) விரிவுபடுத்தப்பட்டது.

இந்தியாவில் தற்போது மிசோரம், மேகாலயா, நாகலாந்து மற்றும் டில்லி நீங்கலாக மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு செயல்படுகின்றது.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம், 1994

இந்தியாவில் 73-ஆவது மற்றும் 74-ஆவது சட்ட திருத்தத்தால் பஞ்சாயத்துராஜ் சட்டமும், நகர்பாலிகா சட்டமும் நிறைவேற்றப்பட்டு, ராஜீவ் கண்ட கனவு நினைவாகியது.

திரு. பி.வி. நரசிம்மராவ் பிரதம மந்திரியாக இருந்தபோது சுயாட்சி அரசாங்க நிறுவனங்களாக செயல்படும் உரிமைகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கும் பொருட்டு 73-ஆவது மற்றும் 74-ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்தங்கள் பஞ்சாயத்துக்களையும், நகராட்சி அமைப்புகளையும் அரசியலமைப்பு முறைமைகளாக ஆக்கியுள்ளன. 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் நாள் 73-ஆவது சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்தது.

73-ஆவது திருத்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட 11 -ஆவது அட்டவணை 29 வகையான அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அவற்றின் மீது பஞ்சாயத்துகள் முழுமையான அதிகாரத்தைப் பெற்றுள்ளன.

73-ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசாங்கம், "தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம்- 1994"-ஐ இயற்றியது. அது ஏப்ரல் 22, 1994-இல் நடைமுறைக்கு வந்தது அச்சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் மூன்றடுக்கு

பஞ்சாயத்து அமைப்பு முறை பின்பற்றப்படுகிறது. அவை,

1. கிராம பஞ்சாயத்துகள் - 12524

2. ஊராட்சி ஒன்றியங்கள் - 385

3.மாவட்ட பஞ்சாயத்துகள் - 38

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், தமிழகத்திலுள்ள அனைத்து பஞ்சாயத்து அமைப்புகளும், தன்னாட்சி பெற்ற அமைப்புகாளக இயங்குகின்றன.

1994-இல் அமல்படுத்தப்பட்ட தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 2006 - இல் திருத்தப்பட்டது.

கிராம சபை

பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் அடித்தளமாக இருப்பது கிராம சபை ஆகும். இது சராசரியாக 500 மக்கள் தொகை கொண்ட ஒன்று அல்லது இரண்டு கிராமங்களை தமது அதிகார எல்லைக்குள் கொண்டிருக்கும்.

கிராம சபையானது நேரடி மக்களாட்சியின் அடிப்படை அலகாகச் செயல்படுகின்றது. கிராம சபை கூட்டமானது ஓர் ஆண்டில் குறைந்தது நான்கு முறையாவது கூட்டப்பட வேண்டும்.

கிராமசபை கூடும் நாட்கள்

ஜனவரி, 26 - குடியரசு தினம்

மே,1 - தொழிலாளர் தினம்

ஆகஸ்ட், 15 - சுதந்திர தினம்

அக்டோபர், 2 - காந்தி ஜெயந்தி

கிராம பஞ்சாயத்து

பஞ்சாயத்து ராஜ்ஜிய இறைமையின் முதலாவதாகவும், தலையாய் அலகாகவும் கிராமப் பஞ்சாயத்து உள்ளது. குறைந்தபட்சம் 500 மக்கள் தொகையைக் கொண்டுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் அது அமைக்கப்படுகிறது.

கிராமப் பஞ்சாயத்து உறுப்பினர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஐந்தாகவும், அதிகபட்ச எண்ணிக்கை 15 ஆகவும் அதன் மக்கள் தொகையைச் சார்ந்து இருக்கும்.

18 வயதடைந்த குடிமக்கள் அனைவரும் பஞ்சாயத்தில் வாக்களிக்க உரிமை படைத்துள்ளனர். 21 வயது நிறைவு செய்தவர்கள் மட்டுமே பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட முடியும். கிராமப் பஞ்சாயத்தின் பதவிக்காலமும் அதன் உறுப்பினர்களின் பதவிக்காலமும் 5 ஆண்டுகளாகும்.

முன்கூட்டியே பஞ்சாயத்து கலைக்கப்படுமாயின் 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மொத்தம் 12,524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம் மாவட்டமாகும். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.

தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துகளைப் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி மாவட்டமாகும். இதில் 35 கிராம பஞ்சாயத்துகள் மட்டுமே உள்ளன.

பஞ்சாயத்து சமிதி / ஊராட்சி ஒன்றியம்

பஞ்சாயத்து ராஜ்ஜிய முறையமைப்பில் நடு அடுக்காக பஞ்சாயத்து சமிதி அமைந்துள்ளது. இது பஞ்சாயத்து யூனியன் அல்லது ஊராட்சி ஒன்றியம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் சேர்மன் என்று அழைக்கப்படுகிறார்.

பஞ்சாயத்து சமிதியின் தலைவர், துணைத் தலைவர் ஆகிய இரு பதவிகளும் காலியாக இருக்குமாயின் வட்டார வருவாய் அதிகாரி (Revenue Divisional Officer - RDO) பஞ்சாயத்து ஒன்றியத்தின் அலுவல் சார்பான உறுப்பினராகவும் தலைவராகவும் இருப்பார்.

தமிழ்நாட்டில் தற்போது 385 ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 13 ஊராட்சி ஒன்றியங்கள் அமைந்துள்ளளன.

தமிழகத்திதல் அதிக ஊராட்சி ஒன்றியங்களைப் பெற்றுள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டமாகும். இது 22 ஊராட்சி ஒன்றியங்களைப் பெற்றுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் ஊராட்சி ஒன்றியங்களைப் பெற்றுள்ள மாவட்டம் - நீலகிரி மாவட்டமாகும். இது 4 ஊராட்சி ஒன்றியங்களைப் பெற்றுள்ளது.

மாவட்ட பஞ்சாயத்து

மாவட்ட பஞ்சாயத்து என்பது பஞ்சாயத்து ராஜ்ஜிய அமைப்பின் மேல்மட்ட அடுக்காகும். ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் ஒரு மாவட்ட பஞ்சாயத்து அமைக்கப்படுகிறது.

இது மாவட்டம் முழுவதும் அதிகார எல்லையைக் கொண்டுள்ளது. எனினும் மாவட்டத்தில் உள்ள நகராட்சிப் பகுதிகள், நகரப் பஞ்சாயத்து, தொழில் நகரியம், இராணுவக்கூட வாரியம் போன்றவை இதனுள் அடங்காது.

மகளிர் இட ஒதுக்கீடு

பஞ்சாயத்து ராஜ்ஜிய முறையானது மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஓர் இனமாகும். இது அரசியலமைப்பின் 7-ஆவது அட்டவணையில், இரண்டாம் பட்டியலில் (மாநில பட்டியலில்) 5-ஆவது இனமாக இடம் பெற்றுள்ளது.

அரசியலமைப்புச் சட்ட விதி 243d- இன் படி உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்குக்கு (1/3) குறையாத இடங்கள் (33%) மகளிருக்காக ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த இட ஒதுக்கீட்டை 50% உயர்த்துவதற்கான சட்டதிருத்தத்திற்கு மத்திய காபினெட் ஆகஸ்ட் 27,2009-இல் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் சில மாநிலங்கள் 50 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்கனவே அமல்படுத்த துவங்கிவிட்டன.

இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கிய முதல் மாநிலம் பீகார் ஆகும். இது 2005-இல் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கியது.

மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர் இடஒதுக்கீடு

உத்திரகாண்ட் - 55%

பீகார் (2005) - 50%

இமாச்சலப் பிரதேசம் - 50%

மத்தியப் பிரதேசம் - 50%

சட்டீஸ்கர் (2008) - 50%

சிக்கிம் (2007) - 40%

ராஜஸ்தான் (2010) - 50%

கேரளா (2010) - 50%

தமிழ்நாடு (1994) - 33%

தற்போது பீகார், உத்திரகாண்டம், இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், கேரளா போன்றவை 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கிவருகின்றன.

உள்ளாட்சி தேர்தல்கள்

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994-இல் இயற்றப்பட்டாலும், தமிழகத்தில் 1996 அக்டோபரில் தான் முதலாவது (சாதாரண) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

அக்டோபர் 2001 - இல் இரண்டாவது (சாதாரண) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அக்டோபர் 2006 இல் மூன்றாவது (சாதாரண) உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 4-ஆவது உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர், 2011 இல் - நடைபெற்றது.

தமிழக பஞ்சாயத்து உயர்மட்ட கமிட்டி

தமிழக அரசு பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகாரங்கள் மற்றும் சிறப்பான செயல்பாடுகளுக்காக அவ்வப்பொழுது உயர்மட்ட கமிட்டிகளை நியமித்துள்ளது.

முதலாவது உயர்மட்ட கமிட்டி 1996-ஆம் ஆண்டு திரு எல்.சி.ஜெயின் (L.C.Jain) தலைமையில் அமைக்கப்பட்டது.

இது ஏப்ரல் 1997 – இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இரண்டாவது உயர்மட்ட கமிட்டி 1997 நவம்பர் 11-இல் திரு.கோ.சி.மணி தலைமையில் அமைக்கப்பட்டது. ஜனவரி 11, 1999-இல் இக்கமிட்டி தனது அறிக்கையை சமர்ப்பித்தது.

மூன்றாவது உயர்மட்ட கமிட்டி 2007-ஆம் ஆண்டு ஜனவரி 22-இல் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கமிட்டிதான் நவம்பர் 1-ஆம் தேதியை "உள்ளாட்சி அமைப்பு நாளாக கொண்டாட பரிந்துரை செய்தது.

தமிழக அரசு நவம்பர் 1-ஆம் தேதியை "உள்ளாட்சி அமைப்புகள் நாளாக" கொண்டாட, அக்டோபர் 26, 2007- இல் அரசாணையை வெளியிட்டுள்ளது.

சிறந்த ஊராட்சிகளை கெளரவிக்கும் வகையில், "உத்தமர் காந்தி ஊராட்சி விருது 2006-2007-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

தமிழக நகர்புற உள்ளாட்சி அரசாங்கங்கள்

மாநகராட்சிகள் - 21

நகராட்சிகள் - 142

நகர பஞ்சாயத்துகள் - 561

நகராட்சி அமைப்பில் மிக உயர்ந்த அமைப்பு மாநகராட்சியாகும். சாதாரணமாக 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர் மேயர் ஆவார். அவர் நகரத்தின் முதற்குடிமகன் மற்றும் நகரத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

ஆணையர் மாநகராட்சியின் தலைமை நிர்வாகி ஆவார். அவர் மாநகராட்சியின் நிர்வாகத்தில் அச்சாணியாகத் திகழ்கின்றார்.

Previous Post Next Post