மாநில அரசாங்க அமைப்பு

இந்திய அரசியலமைப்பு மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் தனியான நிர்வாக முறையை அளித்து ஒரு கூட்டாட்சி அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் VI-ஆவது பகுதியில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி (விதி 152-லிருந்து 237-வரை) எல்லா மாநில அரசுகளும் ஒரே மாதிரியான அமைப்பைப் பெற்றுள்ளன.

எல்லா மாநிலங்களிலும் பாராளுமன்ற அரசாங்க முறையே நடைமுறையில் உள்ளது. அதன்படி ஆளுநர், முதலமைச்சர். அமைச்சரவை, சட்டத்துறை, நீதித்துறை, செயலகம், மாவட்ட நிர்வாகம் போன்றவை செயல்படுகின்றன.

இந்திய அரசியலமைப்பு மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் தனியான நிர்வாக முறையை அளித்து ஒரு கூட்டாட்சி அரசாங்க முறையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர்

அரசியலமைப்பு விதி 153-க்கு இணங்க ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஆளுநர் இருப்பார். 1956-ஆம் ஆண்டின் 7-ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒரே ஆளுநர் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பதவி வகிக்கலாம் என்று வழி வகை செய்தது. பாராளுமன்ற நடைமுறைக்கிணங்க ஆளுநர் மாநிலத்தின் பெயரளவு தலைவராவார்.

மாநிலத்தின் செயல்துறை அதிகாரம் ஆளுநரிடத்தில் உள்ளது. மாநிலத்தின் எல்லா செயல்துறை நடவடிக்கைகளும் ஆளுநரின் பெயரிலேயே செயல்படுத்தப் படுகின்றன. ஆளுநர் மாநிலச் சட்டத்துறையின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளார்.

இந்தியக் கூட்டாட்சி முறையில் மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர், மத்திய அரசின் பிரதிநிதி ஆகிய இரட்டைத் தன்மையான பங்கினை ஆளுநர் பதவிக்கு அரசியலமைப்பு வழங்கியுள்ளது.

முதலமைச்சர்

இந்திய அரசியலமைப்புக்கு இணங்க, மாநில செயல்துறையில் பெயரளவுத் தலைவராக ஆளுநரும், உண்மையான தலைவராக முதலமைச்சரும் உள்ளனர். முதலமைச்சர் அரசாங்கத்தின் தலைவராவார். ஆளுநர் அரசின் தலைவராவார். முதலமைச்சர் மாநில நிர்வாகத்தின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும் செயல்படுகிறார்.

தமிழக சட்டமன்றம்

1861-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்திய கவுன்சில் சட்டத்தை இயற்றியதன் மூலம் மெட்ராஸ் லெஜிஸ்லேடிவ் கவுன்சில் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை மாகாண ஆளுநருக்கு ஆலோசனை வழங்கும் அவையாகவே அது இருந்தது. இந்திய கவுன்சில் சட்டம் 1892-இன் மூலம் அதன் உறுப்பினர் எண்ணிக்கையும், பொறுப்புகளும் அதிகரித்தன.

1909- ஆம் ஆண்டு முதல் இதன் உறுப்பினர்கள் மறைமுக தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1920 முதல் 1937 வரை சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை அமலில் இருந்த போது மாகாணத்தில் ஒரு அவை கொண்ட சட்டமன்றமாக இது செயல்பட்டது.

இந்திய அரசுச் சட்டம் 1919, இயற்றப்பட்டபின் சென்னை மகாணத்தில், 1921-இல் முதன் முதலாக தேர்தல் நடத்தப்பட்டு சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் நாள் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளின் பேரில் கன்னாட் கோமகன் சென்னை மாகாண சட்டமன்றத்தை ஜனவரி 12-ஆம் நாள் துவக்கி வைத்தார்.

இந்த சட்டப்பேரவையின் ஆட்சிக்காலம் மூன்று ஆண்டுகளாக இருந்தது. 1935 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இந்திய அரசு சட்டம்-1935 ஐ இயற்றியது. அது 1937-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி 1937-இல் மகாணத்தில் சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

மேலும் இச்சட்டப்படி சென்னை மாகாணத்தில் இரு அவைகளைக் கொண்ட சட்டமன்றம் அமைக்கப்பட்டது. ஆளுநரையும், இரண்டு அவைகளையும் கொண்டதாகச் சட்டமன்றம் விளங்கியது.

இந்திய அரசு சட்டம் 1935-இன்படி 215 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையும், 56 உறுப்பினர்கள் கொண்ட சட்ட மேலவையும் உருவாக்கப்பட்டது. இச்சட்டப்படி தேர்தல் நடத்தப்பட்டு ஜூலை 1937-இல் முதல் சட்டப்பேரவை பதவியேற்றது.

இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கேட்காமலேயே ஈடுபடுத்தினர். அதனால் 1939-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை மாகாண அமைச்சரவை பதவி விலகியது. அதனை தொடர்ந்து அந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டு 2-ஆவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சென்னை மாநிலத்தில் பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் முதல் பொதுத் தேர்தல் 1952-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. அதன்படி மார்ச் 1,1952-இல் சுதந்திரத்திற்கு பிறகு முதல் சட்டப்பேரவை அமைக்கப்பட்டது.

தமிழக சட்ட மேலவை

சட்ட மேலவை "விதான் பரிஷத்" எனப்படுகிறது. சட்ட மேலவை ஓர் நிரந்தர அமைப்பு ஆகும். இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். ஒவ்வொரு இரண்டு ஆண்டு முடிவில், இதன் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் பதவி விலகுவர். இதன் உறுப்பினர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

1937 முதல் 1950 வரை இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 54 ஆகவும், அதிகபட்சம் 56 ஆகவும் இருந்தது. 1937-ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் நாள், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை மண்டபத்தில் சட்ட மேலவை கூடியது. 

இந்த மேலவையில் மொத்தம் 55 உறுப்பினர்கள் இருந்தனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மேலவை 1952-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் நாள் முதல் செயல்படத் தொடங்கியது. 

இதன் தலைவர் டாக்டர் பி.வி.செரியன் ஆவார். இவருக்குப் பின் எம்.ஏ.மாணிக்க வேலுவும், அவரையடுத்து சி.பி.சிற்றரசுவும் மேலவைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1978-ஆம் ஆண்டு ஏப்ரல் 26-ஆம் தேதி ம.பொ.சிவஞானம் மேலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1986-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் நாள் மேலவை கலைக்கப்படும் வரை தொடர்ந்து ஒன்பது ஆண்டுகாலம் மேலவைத் தலைவராக விளங்கினார்.

மேலவை தேர்தல்

மேலவை உறுப்பினர்களுக்கான தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும். மேலவை உறுப்பினர்கள் கீழ்க்கண்ட 5 வகைகளில் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். 

1. பட்டதாரிகள் மூலம் 1/12 பகுதி உறுப்பினர்களும்,

2. ஆசிரியர்கள் மூலம் 1/12 பகுதி உறுப்பினர்களும்,

3. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 1/3 பகுதி உறுப்பினர்களும், 

4. மாநில சட்டமன்றம் மூலம் 1/3 பகுதி உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

5. 1/6 பகுதி உறுப்பினர்கள் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.

கலை, இலக்கியம், அறிவியல், கூட்டுறவு, சமூக சேவை போன்ற துறைகளில் தலைசிறந்தவர்கள் அமைச்சரவையின் பரிந்துரைப்படி மேலவை உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்படுவர்.

1947-ஆம் ஆண்டு சென்னை விலங்குகள் மற்றும் பறவைகளை பலியிடத் தடை செய்யும் சட்டத்துக்கான முன்வடிவு மேலவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுவே சட்டமன்றத்தில் முதன்முதலாக நிறைவேற்றப்பட்ட மேலவையின் சட்ட முன்வடிவாகும்.

மேலவை கலைப்பு

எம்.ஜி.ஆர். ஆட்சியில் 1986-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் நாள் சட்ட மேலவையை கலைப்பதற்கான தீர்மானம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானம் குறித்த சட்ட முன் வடிவு மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, 1986 செப்டம்பர் 1-இல் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு இந்திய அரசுச் சட்டம் எண் 40 - ஆக வெளியிடப்பட்டது.

இச்சட்டம் 1986-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்ததால், அன்றைய தினமே மேலவை கலைக்கப்பட்டது.

மீண்டும் மேலவை

1989-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மீண்டும் மேலவையை ஏற்படுத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1991 - இல் அ.தி.மு.க ஆட்சியின் போது அத்தீர்மானம் நீக்கப்பட்டது.

1996-இல் தி.மு.க அரசு மீண்டும் மேலவை அமைப்பதற்கான மசோதாவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. இது மத்திய அரசின் பார்வைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இம்முயற்சியும் தோல்வியடைந்தது.

தி.மு.க ஆட்சியில் 2010 ஏப்ரல் 12-இல் மீண்டும் மேலவை அமைப்பதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

2010, மே 16 - இல் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தமிழக மேலவை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். பின்னர் செப்டம்பர் 30.2010 அன்று மேலவைத் தொகுதிகளின் பட்டியல் குடியரசுத் தலைவரால் வெளியிடப்பட்டது.

இதன்படி தமிழக மேலவை அமைக்கும் பணியின் சிறப்பு ஆணையராக ஏ.எம்.பி. ஜமாலுதீன் என்பவரை தமிழக அரசு நியமித்தது. ஆனால் 2011 - இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் மேலவை உருவாக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

2011-ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் சட்ட மேலவை செயல்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் சட்ட மேலவையானது ஏப்ரல் 2007-இல் மீண்டும் அமைக்கப்பட்டது.

தமிழக தேர்தல்கள்

தமிழ்நாட்டில் சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கு (நேரடி) தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளும், 39 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. இவற்றுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 188 பொதுத் தொகுதிகளும், 46 தனித்தொகுதிகளும் உள்ளன. இந்த 46 தனித்தொகுதிகளில் 44 தொகுதிகள் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும். 2 தொகுதிகள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. 

திருவள்ளுர், காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி, ஆகியவை தமிழகத்திலுள்ள 7 நாடாளுமன்ற தனித்தொகுதிகளாகும்.

சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் இது வரை 16 சட்டமன்ற தேர்தல்களும், 17 நாடாளுமன்ற தேர்தல்களும் நடைபெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டு 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில், தமிழக சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும், உள்ளாட்சித் தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன.

மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள், தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் மறைமுகத் தேர்தல்களாக நடைபெறுகின்றன. உள்ளாட்சியிலும் மறைமுகத் தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையரால் நடத்தப்படுகின்றன.

4-ஆவது உள்ளாட்சித் தேர்தல்கள் 2011-இல் நடைபெற்றுள்ளன. 2011-இல் தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 4,71,16,687. 2011-ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 2010-இல் தனது வைர விழாவினைக் கொண்டாடியது.

இந்திய தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை 1993-ஆம் ஆண்டு முதல் வழங்குகிறது. தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை 1996–ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு 2006 ஜூலையில் தொடங்கப்பட்டது.

2011 சட்டமன்ற பேரவை தேர்தல் 

இது 2009-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது சட்டமன்ற தேர்தலாகும். தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக, மே 13. 2011 அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 77.8 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. 

இதுவே தமிழகச் சட்டமன்ற பேரவைத் தேர்தல்களில் பதிவான மிக அதிகப்படியான வாக்குகள் விழுக்காடு ஆகும். இதற்கு முன் 1967-ஆம் ஆண்டு தேர்தலில் 76.57 விழுக்காடு வாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

Previous Post Next Post