தி.மு.க. ஆட்சியில் தமிழகம்

1944-ஆம் ஆண்டு தந்தை பெரியாரால் திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பெரியாருக்கும் அண்ணாதுரைக்கும் இடையே தோன்றிய கருத்து வேறுபாடு காரணமாக, அண்ணாதுரை திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்.



தி.மு.க. என்றழைக்கப்படும் திராவிட முன்னேற்றக் கழகம் 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் பங்கேற்கவில்லை. தி.மு.க. 1967 தேர்தலில் 138 இடங்களை வென்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

1967 பிப்ரவரி 6-ஆம் நாள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். இவரது ஆட்சியில் 1969-ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று சென்னை மாநிலம் "தமிழ்நாடு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1968 ஜனவரி 23-இல் தமிழக அரசின் மொழிக் கொள்கையாக "தமிழ், ஆங்கிலம் '” என்ற இருமொழி திட்டத்தை அறிவித்தார் அண்ணா. 1968 ஜனவரி 3 -இல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. அண்ணா அறிமுகப்படுத்திய சுயமரியாதைத் திருமண பாதுகாப்புச் சட்டம் 1968, ஜனவரி 20 முதல் நடைமுறைக்கு வந்தது.

1969-இல் அண்ணா இறந்ததும் நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பணியாற்றினார். 1969 பிப்ரவரி 10-இல் கலைஞர் மு.கருணாநிதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார். 1971 ஜனவரி 31 அன்று ஆட்சி கலைக்கப்படும் வரை அவர் அப்பதவியில் தொடர்ந்தார்.

குறிப்பு:

கலைஞர் திரு.கருணாநிதி அவர்களின் ஆட்சிக்காலங்கள்

1969 - 1971 அண்ணாதுரை மறைவுக்குப்பின் முதல்முறை தமிழக முதல்வரானார். 

1971 - 1974 இரண்டாவது முறையாக தமிழக முதல்வரானார்.

1989 - 1991 எம்.ஜி.இராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு மூன்றாவது முறை தமிழக முதல்வரானார். 

1996 - 2001 நான்காவது முறையாக தமிழக முதல்வரானார். 2006 - 2011 ஐந்தாவது முறை தமிழக முதல்வரானார்.

1972 அக்டோபர் 14-இல் கட்சிப் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப்பெரிய பிளவாகக் கருதப்பட்டது.

கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் தமிழ் வளர்ச்சிக்காக தனியாக அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த' என்ற பாடல் அறிவிக்கப்பட்டது.

“ஸ்டேட் எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் இயக்கப்பட்ட பேருந்துகளுக்கு "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1969 ஜூன் 13-இல் தமிழ்நாடு வேளாண்மைத் தொழிலாளர் நியாய ஊதியச் சட்டம் இயற்றப்பட்டது. 1970-இல் பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் தொடங்கப்பட்டது.

1970-இல் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட்டது. 1971 - இல் கண்ணொளி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

1973 - இல் இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கும் திட்டம் துவக்கம். 1974 - இல் ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம் துவக்கம்.

1974-இல் அகர முதலியை பல தொகுதிகளாக வெளியிடுவதற்கான 'அகர முதலி திட்ட இயக்கத்தை' நிறுவினார் கருணாநிதி. 1975-இல் அனாதை சிறுவர் மற்றும் மகளிர் மறுவாழ்வுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

1969 அக்டோபர் 2 அன்று மத்திய மாநில அரசுகளுக்கிடையிலான உறவுகள் பற்றி ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி டாக்டர்.பி.வி.ராஜமன்னார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 1974 ஏப்ரல் 20-இல் "மாநில சுயாட்சி' கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

1976 முதல் 1989 வரை அ.தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க எதிர்க்கட்சியாகவும் இருந்தது. 1989-இல் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டம் துவங்கப்பட்டது.

மக்கள் நலன்களுக்கான குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம் ஆகியவை உருவாக்கப்பட்டன. 1989 டிசம்பர் 29-இல் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது.

1993 அக்டோபர் 11-இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி (வைகோ) கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் தி.மு.க.-வில் இரண்டாவது முறையாக பிளவு ஏற்பட்டது. 1996-இல் “மெட்ராஸ்" என்பது “சென்னை” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1999-இல் தமிழகத்தின் முதல் "உழவர் சந்தை" மதுரையில் துவக்கப்பட்டது. 2006 ஜூன் 3-ஆம் தேதி “2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை" துவக்கினார் கருணாநிதி. 2006-இல் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 "கல்வி வளர்ச்சி நாளாக" அறிவிக்கப்பட்டது. 2006 நவம்பர் 11-இல் "வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் '' துவக்கம்.

2006 டிசம்பர் 30-இல் "வரும் முன் காப்போம் திட்டம்” துவக்கப்பட்டது. 2007 ஜனவரி 15 அன்று இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்காக 2006 ஜூலை 7-இல் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவின் பரிந்துரைப்படி தமிழகத்தில் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 2007 ஜனவரி 1 முதல் தமிழ்நாட்டில் வாட்வரி அமலுக்கு வந்தது. 2008 செப்டம்பரில் இலவச அவசர கால மருத்துவ ஊர்தி திட்டம் '108' (இலவச அம்புலன்ஸ் சேவை) அறிமுகப்படுத்தப்பட்டது.

2009 பிப்ரவரி 2-ஆம் தேதி "உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்" ஆரம்பிக்கப்பட்டது. பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்துவதற்காக தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பு முறைப்படுத்துதல்) சட்டம் 2009-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. 2010 மார்ச் 13 - இல் புதிய சட்டமன்ற வளாகம் திறக்கப்பட்டது.

2010-ஆம் ஆண்டு "தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறை சட்டம்'' இயற்றப்பட்டது. 2010 ஜூன் 23 முதல் 27 வரை கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற்றது.

Previous Post Next Post