சோழப் பேரரசு தேற்றம் :

சோழர்கள் பற்றிய தகவல்கள் மகாபாரதம், அசோகரின் கல்வெட்டுகள், மெகஸ்தனிஸ், மற்றும் தலாமி ஆகியோரது குறிப்புகள் போன்றவற்றில் சோழர்களைப் பற்றிய செய்திகளைக் காணமுடிகிறது. சங்க காலத்தில் சோழர்கள் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்துள்ளனர். அவர்களது அன்றைய தலைநகரமாக உறையூர் விளங்கியது. சோழர்களது இலச்சினையாக 'புலி' உருவம் இடம்பெற்றது. முற்காலச் சோழர்களில் கரிகாலச் சோழன் புகழ்பெற்றவர் ஆவார். இவர் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார். முற்காலச் சோழர்கள் தமது இறுதிக்காலத்தில் உறையூரை மட்டுமே ஆட்சிசெய்யுமளவில் சிற்றரசர்காளாயினர். பல்லவர்கள் ஆட்சி வீழ்ச்சியுற்ற போது சோழ அரசு மறுபடியும் வளர்ச்சியடை ஆரம்பித்தது.
.png)
பிற்காலச் சோழர்கள் :
பிற்கால சோழ அரசை உருவாக்கியவர் விஜயாலயச் சோழன் ஆவார். இவர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றி, கி.பி .850 - இல் அதை சோழ நாட்டின் தலைநகராக்கினார். இதுவே பிற்காலச் சோழர்கள் ஆட்சியமைக்க அடித்தளமாக அமைந்தது. பிற்கால சோழ மன்னர்கள் கி.பி. 850 முதல் கி.பி. 1279 வரை சுமார் 430 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். பிற்காலத்தில் இச்சோழ மரபினர் தென்னிந்தியாவின் பெரும் பகுதியையும், (இலங்கை, கடாரம் சுமத்ரா, மலேசிய பகுதிகள்) ஆகியப் பகுதிகளையும் வென்றதால், இவர்கள் பேரரசு சோழர்கள் எனப்பட்டனர். விஜயாலய சோழனின் மகன் முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907) கடைசி பல்லவ மன்னன் அபராஜிதனை தோற்கடித்து தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றினார். மேலும் கொங்கு நாட்டையும் தனது இராஜ்ஜியத்துடன் இணைத்துக் கொண்டார்.
முதலாம் பராந்தகன் (கி.பி.907 - கி.பி.955)
உத்திரமேரூர் கல்வெட்டுகள் இவரைப்பற்றிய நிறைய தகவல்களைத் தருகின்றன. ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தகன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகரான மதுரையை வென்றதால் 'மதுரை கொண்டான்' என்று புகழப்பட்டார். இலங்கை மற்றும் பாண்டிய அரசர்களின் கூட்டுப்படையை வென்றதால் "மதுரையும் ஈழமும் கொண்டான்" என்ற பட்டம் பெற்றார். இவர் சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலுக்கு பொன்னால் கூறை வேய்ந்தார். இதனால் 'பொன்வேய்ந்த சோழன்' என்று அழைக்கப்பட்டார். புகழ்பெற்ற தக்கோலம் போரில் இராட்டிரகூட மன்னர் மூன்றாம் கிருஷ்ணனிடம் தோற்று, கி.பி. 955 - இல் மரணமடைந்தார். முதலாம் பராந்தகனுக்கு பிறகு கண்டராதித்தியன் (கி.பி.949-957), அரிஞ்சயன் (கி.பி.956-957), இரண்டாம் பாராந்தகன் எனப்பட்ட சுந்தரச்சோழன் (கி.பி.956-973), ஆதித்தன் (கி.பி.956-966) மற்றும் உத்தமசோழன் (கி.பி.965-985) ஆகியோர் ஆட்சி புரிந்தனர்.
பட்டப்பெயர்கள்
மதுரை கொண்டான், மதுரையும் ஈழமும் கொண்டான், பொன்வேய்ந்த சோழன்.
முதலாம் இராஜராஜ சோழன் (கி.பி. 985 - கி.பி.1014)
திருவாலங்காடு செப்பேடுகள் இவரைப்பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. இவர் சோழர் குலத்தின் வலிமை மிக்க மன்னராவார். இவர் இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தாவை வென்று அனுராதபுரத்தையும் இலங்கையின் வடபகுதியையும் கைப்பற்றினார். புலனருவா நகரைப் புதிய தலைநகராக்கினார். அங்கு ஒரு சிவன் கோயிலையும் கட்டினார்.
முந்நீர் பழந்தீவுகள் எனப்பட்ட மாலத்தீவுகளையும் வென்றார். இவர் காலத்தில் சோழப்பேரரசின் பரப்பு தென்னிந்தியாவையும் கடந்து பரந்து விரிந்திருந்தது. இவர் சேரமன்னன் பாஸ்கரவர்மனை காந்தளூர் (திருவனந்தபுரம்) என்னுமிடத்தில் வென்றார். இவர் கல்யாணியை ஆண்ட சத்யசரயாவிடமிருந்து வேங்கியைக் கைப்பற்றி சக்திவர்மனுக்கு அளித்தார். இவர் தமது மகள் குந்தவையை சக்திவர்மனின் (கீழை/வெங்கி சாளுக்கியர்) சகோதரர் விமலாதித்தனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
கங்கவாடி, தடிகைபாடி, நொளம்பாடி ஆகிய மைசூரின் பகுதிகளையும், ரெய்ச்சூர் தோஆப் பகுதியையும் வென்றார். இவர் தமது ஆட்சிக் காலத்தில் நில அளவை முறையை அறிமுகப்படுத்தினார். இவர் சாலை நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் கட்ட அனுமதியளித்ததோடு, ஆணைமங்கலம் எனும் கிராமத்தையும் புத்த மடாலயத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இவர் சைவ சமயத்தைப் பின்பற்றினார். இவரது காலத்தில்தான் தேவாரம் தொகுக்கப்பட்டது. இவர் கி.பி. 1010 - ஆம் ஆண்டு தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். இவர் கி.பி. 1014 - இல் இயற்கை எய்தினார்.
பட்டப்பெயர்கள்
மும்முடிச் சோழன், அருண்மொழி, இராஜகேசரி, காந்தளுர் சாலை கலமருந்தருளியவன், ஜெயங்கொண்டான் மற்றும் சிவபாதசேகரன்,
முதலாம் இராஜேந்திரன் (கி.பி. 1012 - கி.பி. 1044)
இராஜராஜசோழனின் மகனான இராஜேந்திர சோழனைப் பற்றி திருவாலங்காடு சேப்பேடுகள் மற்றும் கரந்தை செப்பேடுகள் பல தகவல்களைத் தருகின்றன. இவர் இடைதுறைநாடு (ரெய்ச்சூர் தோஆப்), வனவாசி (கடம்பர் தலைநகர்), கொள்ளிப்பாக்கை (ஹைதராபாத் பகுதி), மண்ணைக்கடக்கம் (மால்கெட்) ஆகிய இடங்களை வென்றார்.
ஈழமண்டலம் எனப்பட்ட இலங்கை முழுவதையும் கைப்பற்றினார். பாண்டியர், சேரர், மேலைச்சாளுக்கியர் ஆகியோரையும் தோற்கடித்தார். ஸ்ரீவிஜயம், கடாரம், மலேயா தீபகற்பம் மற்றும் நிக்கோபார் தீவுகளைச் சார்ந்த பகுதிகள் ஆகிய இடங்களை, கடல் கடந்து போரிட்டு வென்றது இவரது மிகச்சிறந்த செயலாகும். இராஜேந்திரன் காலத்தில் சோழப்பேரரசானது புகழின் உச்சநிலையை எய்தியது. இவர் வங்காள அரசன் முதலாம் மகிபாலனைத் தோற்கடித்து, கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகிலுள்ள சோழகங்கம் என்ற ஏரியில் கலந்தார்.
முதலாம் இராஜேந்திரன் தமது வடஇந்திய படையெடுப்பின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரை நிர்மாணித்தார். அங்கு ராஜேஸ்வர ஆலயத்தையும் எழுப்பினார். இவர் தலைநகரை தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். இவர் தமது மகள் அம்மங்கா தேவியை வெங்கியைச் சேர்ந்த சாளுக்கிய இளவரசன் இராஜராஜனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
பட்டப்பெயர்கள்
கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், முடிகொண்டான், பண்டித சோழன், உத்தம சோழன்.
முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1120 - கி.பி.1170)
குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா ஆகிய நூல்கள் குலோத்துங்கனின் நிர்வாகம், இராணுவ வெற்றிகள் பற்றி விளக்குகின்றன. முதலாம் குலோத்துங்க சோழன் அம்மங்காதேவியின் மகனாவார். இவர் வெங்கியை ஆண்ட சாளுக்கிய மரபைச் சேர்ந்தவர். பின்னர் சோழநாட்டுக்கு மன்னரானார்.
இவர் சோழநாட்டுடன் வெங்கியை இணைத்து, சாளுக்கிய சோழமரபைத் தோற்றுவித்தார். மேலைச் சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தனை தோற்கடித்து கலிங்கத்தைக் கைப்பற்றினார். இவர் காலத்தில் இலங்கை சோழப்பேரரசிலிருந்து விடுதலை பெற்றது. ஸ்ரீவிஜயம் என்ற நாட்டுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்ததால் கி.பி.1077 - இல் அங்கு வணிகக் குழுவினரையும் அனுப்பி வைத்தார்.
இவர் சீன அரசவைக்கு தூதுவரை அனுப்பினார். இவர் மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி உட்பட பலவிதமான வரிகளை நீக்கியதால், சுங்கம் தவிர்த்த சோழன் என்ற பட்டப் பெயரைப் பெற்றார். சோழப் பேரரசு இவர் காலத்தில் புத்துயிர் பெற்றது. இவர் ஒட்டக்கூத்தர், சேக்கிழார், கம்பர், புகழேந்தி ஆகிய புலவர்களை ஆதரித்தார்.
பட்டப்பெயர்கள்
சுங்கம் தவிர்த்த சோழன், நிலமளந்த பெருமாள், திருநீற்றுச் சோழன்
இரண்டாம் குலோத்துங்கன் கிருமிகந்த சோழன் என்று அழைக்கப்பட்டார். சோழநாட்டை ஆண்ட கடைசி சிறந்த அரசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவார். இவர் கி.பி.1205 - இல் மதுரையைக் கைப்பற்றி "சோழபாண்டியன்'' என்று பட்டம் சூட்டிக் கொண்டார். சோழ மன்னன் மூன்றாம் இராஜேந்திரன் (கி.பி.1246-1279) காலத்தில் சோழப் பேரரசு சிதைவுறத் தொடங்கியது. காடவராயன் போன்ற குறுநில மன்னர்கள் எழுச்சி, பாண்டிய நாட்டு எழுச்சி ஆகியவை சோழ அரசைநிலைகுலையச் செய்தது. பாண்டிய மன்னன் இரண்டாம் ஜடாவர்ம சுந்தரப்பாண்டியன், சோழநாட்டின் கடைசி அரசனான மூன்றாம் இராஜேந்திரனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றினார். அத்துடன் சோழப்பேரரசு முடிவுக்கு வந்தது.
பட்டப்பெயர்கள்
யானை மேல் துஞ்சிய சோழன் - இராஜாதித்தியன் சுந்தரச் சோழன் - இரண்டாம் பராந்தகன்.
சோழ ஆட்சி முறை :
சோழர்களின் நிர்வாகம் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டு கூறுகிறது சோழப்பேரரசு 9 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த மாகாணங்கள் மண்டலங்கள் என்றும் அதன் தலைவர்கள் ஆளுநர்கள் என்றும் அழைக்கப்பட்டனர். சோழநாட்டின் நிர்வாக அடிப்படை அலகு ‘ஊர்’ என்பதாகும். பல ஊர்கள் சேர்ந்தவை வளநாடு என்றும், பல வளநாடுகள் சேர்ந்தது மண்டலம் என்றும், மண்டலங்கள் அனைத்தும் ஒருங்கே சேர்ந்ததாக சோழநாடு விளங்கியது.
கிராமங்கள் சோழர் நிர்வாகத்தின் கடைசி அங்கமாக விளங்கின. கிராம சுயாட்சி என்பது சோழர் நிர்வாகத்தின் ஒரு சிறப்பு அம்சாமாகும். பெருந்தனம், சிறுதனம் என்று அழைக்கப்பட்ட அதிகார வர்க்கம் ஆட்சிக்கு பொறுப்பு வகித்தன. சோழ அரசின் முக்கிய வருவாய் நிலவரியாகும். இது விளைச்சலில் ஆறில் ஒரு பங்காக (1/6) இருந்தது. நில வருவாய்த்துறை புறவு வரித்திணைக்களம் என்று அழைக்கப்பட்டது.
சோழர்களின் கப்பற்படை தென்னிந்தியாவிலேயே வலிமை மிக்கதாக இருந்தது. இதனால் வங்காளவிரிகுடா சோழர்களின் ஏரிபோல விளங்கியது. '' நாடு'' என்பது சோழர்களின் நிர்வாகத்தில் ஒரு முக்கியப்பிரிவு ஆகும். இதன் தலைவர்கள் நாட்டார்கள் என்று அழைக்கப்பட்டனர்.
முதலாம் பராந்தக சோழன் காலத்தைச் சேர்ந்த உத்திரமேரூர் கல்வெட்டு, கிராம நிர்வாகத்தைப் பற்றியும் குடவேலை முறையைப் பற்றியும் விரிவாக விளக்குகிறது. கிராம நிர்வாகத்தை கிராம சபை என்ற நிர்வாகக் குழு கவனித்து வந்தது. கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிராம குடியிருப்பு பகுதிகள் "ஊர் நத்தம்" என்றும், பிராமணர்கள் குடியிருந்த பகுதி சதுர்வேதி மங்கலம் என்றும் அழைக்கப்பட்டன. கிராம நிர்வாகத்தினை வாரியங்களின் துணையுடன் கிராம நிர்வாகக் குழுக்கள் சிறப்பாக செய்தன. இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் வாரியப் பெருமக்கள் என்று அழைக்கப்பட்டனர். சமவத்சர வாரியம், ஏரிவாரியம், தோட்ட வாரியம், பஞ்ச வாரியம், பொன் வாரியம், புறவு வரி வாரியம் ஆகியவை குறிப்பிடத் தகுந்தன ஆகும்.
வாரிய எண்ணிக்கையும், உறுப்பினர் எண்ணிக்கையும் கிராமங்களுக்கேற்ப மாறுபட்டது. சோழற்களின் கிராம நிர்வாகத்தில் மிகவும் சிறந்த அம்சமாகக் குடவோலை முறை கருதப்படுகிறது. நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு கிராமமும் 30 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பிரதிநிதி குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமுதாய நிலை :
சமுதாயம் வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கரிகாலன் காலத்தில் வலங்கை, இடங்கை ஆகிய சமுதாயப் பிரிவுகள் இருந்தன. வலங்கை பிரிவில் 98 சாதிகளும், இடங்கை பிரிவில் 98 சாதிகளும் இருந்தன. அடிமை முறை மற்றும் அடிமை வியாபாரம் பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
யானைப்படை, குதிரைப் படை, காலாட்படை, கப்பற்படை ஆகிய பிரிவுகளைக் கொண்ட நிலையான படையை பெற்றிருந்தனர். அரசரின் தனிப்படை கைக்கோளப் பெரும்படை எனப்பட்டது. அரசரைப் பாதுகாக்கும் சிறப்புக் காவல் வீரர்கள் வேளைக்காரர் எனப்பட்டனர். இராணுவ முகாம்கள் கடகங்கள் என்று அழைக்கப்பட்டன. அரசி செம்பியன் மகாதேவியும், குந்தவை அரசியும் கோயில்களின் காப்பாளராக விளங்கினர். பெண்கள் 'சிறுபாடு' என்னும் சிறுசேமிப்பு பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்.
மகாபலிபுரம், காவிரி பூம்பட்டினம், சேலையூர், கொற்கை ஆகிய சோழத் துறைமுகங்கள் மூலம் அயல்நாட்டு வாணிபம் நடைபெற்றது. யானைகள், ஏலக்காய், பருத்தி மற்றும் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அரேபிய குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. சோழ அரசர்கள் பொன், வெள்ளி, செப்பு நாணயங்களை வெளியிட்டனர். தேவர் அடியார் முறை சோழர் காலத்தில் தான் தோன்றி வளர்ந்தது. திராவிடப்பாணி கட்டடக் கலை சோழர் காலத்தில் ஏற்றம் பெற்றது.
ஆரம்ப காலத்தில் சோழர்கள் செங்கற்கோயில்களையும் பிற்காலத்தில் கற்கோயில்களையும் கட்டினர். சோழர்காலக் கோயில்களின் தனிச்சிறப்பு அதன் விமானமாகும். இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயில், தமிழகத்திலேயே மிக அகலமான மற்றும் உயரமான விமானம் கொண்ட கோயிலாகும். முதலாம் குலோத்துங்கன், கும்பகோணத்தில் சூரியக் கடவுளுக்காக ஒரு கோயிலைக் கட்டினார்.
தென்னிந்திய வரலாற்றில் சூரியனுக்காக கட்டப்பட்ட முதல் கோயில் இதுவாகும். இரண்டாம் இராஜராஜன் தராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். விஜயாலயன், நார்த்தாமலையில் (புதுக்கோட்டை மாவட்டம்) சோழீஸ்வரம் என்ற கோயிலைக் கட்டினார். இக்கோயில் முற்கால சோழர்களின் கட்டடக் கலைக்கு ஒரு நல்ல உதாரணமாகும். சோழர்கால ஓவியக் கலை வளர்ச்சிக்கு முதலாம் இராஜராஜனும் ராஜேந்திரனும் அதிக பங்காற்றினர். சோழர்களது சுவரோவியங்களை தஞ்சாவூர், திருமயம், காஞ்சி கைலாசநாதர் கோயில், நார்தாமலை ஆகிய இடங்களில் காணலாம்.
சோழர் காலத்தில் இசைக்கலை நன்கு வளர்ச்சியுற்றது. இசையில் 23 பண்கள் உபயோகிக்கப்பட்டன. இன்றைய கர்நாடக இசைக்கு சோழர்காலத்தில்தான் அடித்தளமிடப்பட்டது. இதே நாட்களில்தான் பரதநாட்டியம் என்னும் ஆடற்கலையும் தோன்றியது. சோழர் காலத்தில் கதகளி, பரதநாட்டியம் ஆகிய இருவகை நடனங்கள் போற்றி மதிக்கப்பட்டன. சிவ பெருமானே கரனவகை நடனத்திற்கு உதாரண நாயகராகக் கருதப்பட்டார். நடராஜபெருமானின் நாட்டியக் கோல சிலைகள் சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலிலும் காணப்படுகின்றன.
தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோயிலும் சோழர்கால கலாச்சார நினைவுச் சின்னங்களாக யுனெஸ்கோ நிறுவனத்தில் அறிவிக்கப் பட்டுள்ளன.