ஆஸ்பிரின் மருந்து அறிமுகம்:

இன்றைய நவீன அவசர உலகில் பலகோடி மக்களை பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முதலிடத்தில் இருப்பது இதய தாக்குதல் (எ) மாரடைப்பு  (எ) ஆர்ட் அட்டாக். இந்த கொடூர நாசக்கார நோய் வந்தவுடன்... ஆஸ்பிரின் மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றால்... மாரடைப்பை தவிர்க்கலாம் என்கிறது இன்றைய மருத்துவ உலகம். 

அத்தகைய உயிர்போகும் நிலையில் மரணத்தை தடுக்கும் ஆபத்தாண்டவன் 'ஆஸ்பிரின்' மாத்திரையை கண்டுபிடித்தவர் பெலிக்ஸ் ஹாஃப்மன். இவர் 1868 - ஆம் ஆண்டு, ஜனவரி 21 - ம் நாள் ஜெர்மனியிலுள்ள 'லுட்விக்ஸ் பெர்க்' என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ஜாகாப் (Jakob). இவர் சிறு தொழிலதிபர்.

இளமைப் பருவம்:

Biography of Felix Hoffmann - இதயம் காக்கும் ஆஸ்பிரின் மாத்திரையை கண்டறிந்த விஞ்ஞானி ''பெலிக்ஸ் ஹாஃப்மேன்'' வாழ்க்கை வரலாறு (1868 - 1946)

இவர் உள்ளூரில் படித்தார் உயர்நிலைப் பள்ளியில் நன்கு படித்தார். 1890 - ஆம் ஆண்டு பார்மஸ்சூடிகல் பரீட்சை எழுதி தேறினார்; அடுத்து மியூனிச் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையிலும், வேதியியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பல்கலைக்கழகத்தில் நன்கு பயின்று முனைவர் பட்டம் பெற்று சாதனையாளராகத் திகழ்ந்தார். 

மருந்துகள் தயாரிக்கும் ஆர்வம் அவருக்குள் ஊற்றாக பெருகிக் கொண்டே இருந்தது. இவரின் திறனை அறிந்த பேயர் என்ற புகழ்பெற்ற மருத்துவ நிறுவனம் அவரை பணிக்கு சேர்த்துக் கொண்டது. அந்த நிறுவனத்தில் பணிபுரியும்போது வலி நிவாரணத்திற்கான மருந்துகளை தயாரிப்பதில் தீவிரமாக செயல்பட்டார்.

இந்த நேரத்தில் அவரின் தந்தையார் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் இருவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டனர். எவ்வளவோ மருந்துகள் கொடுத்தும் நோய் குணமாகாத நிலை. தந்தைக்கான நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் இரவும், பகலும் கண் உறங்காமல் ஆய்வில் ஈடுபட்டார். 

அவரின் தீவிர ஆய்வால் 1897 - ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10 - ம் தேதி 'வலி'க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மருந்தின் வேதியியல் பெயர் அஸிடைல் சாலி சிலிக் அமிலம் (Acetyl Salicylic Acid). இந்த மருந்தை வலி, வீக்கம், ஜூரம் போன்ற நோயாளிகளுக்கு கொடுத்து 'சோதனை'யிடப்பட்டது. பெலிக்ஸ் நோய்களுக்கு நிவாரணம் கிடைத்ததாக நோயாளிகள் சொல்ல மிகவும் மகிழ்ந்தார்.

ஆஸ்பிரின் கண்டுபிடிப்பு:

அந்த மருந்திலிருந்து புதிய ஒரு மருந்தை தயாரித்து, தன் தந்தைக்கு அம்மருந்தை கொடுக்க மூட்டுவலி குறைந்தது. பெலிக்ஸ் கண்டுபிடித்த மருந்தால் பல நோயாளிகள் பல்வேறு நோய்களிலிருந்து 'குண' மடைவதைக் கண்ட மருத்துவ உலகம் அம்மருந்தை இரு கைகொண்டு வரவேற்றது.

ஜெர்மன் தவிர இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகள் அம்மருந்தைக் கேட்டு வாங்க மக்களுக்கு கொடுத்தனர் மருத்துவர்கள். நோய்கள் குணமாவதைக் கண்ட மருத்துவர்களும், மக்களுக்கு வலிகளுக்கு நிவாரண மருந்தை கண்டுபிடித்த பெலிக்ஸையும் கடவுளாய் வணங்கினர். மருந்தின் பெயர் நீளமாய் இருப்பதைக் கண்ட பேயர் நிறுவனம் அதற்கு 'ஆஸ்பிரின்' என்ற பெயரில் மார்க்கெட் வியாபாரம் செய்தது.

ஆஸ்பிரினுக்கு உலகம் முழுக்க பெரும் வரவேற்பு உண்டானது. ஆரம்பத்தில் மருந்து 'தூளாய்' கொடுக்கப்பட்டது. பின்னர் அது மாத்திரை வடிவில் தயாரித்து விற்கப்பட்டது. மக்கள் தலைவலியா... ஆஸ்பிரின்... மூட்டுவலியா... ஆஸ்பிரின்... தசைவலியா... ஆஸ்பிரின் ... என மருத்துவரின் அனுமதியின்றி வாங்கி வாங்கி 'சாப்பிட்டு' நோய்களிலிருந்து 'விடுதலை' பெற்றனர்.

மறைவு :

மக்களின் உடல் வலிகளுக்காக ஆஸ்பிரினை கண்டுபிடித்த அம்மாமேதை 1946 - ஆம் ஆண்டு, பிப்ரவரி 8 - ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். என்றாலும் 'ஆஸ்பிரின்' என்ற மருந்து உலகம் உள்ளவரை இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதுவரை 'பெலிக்ஸ்' மக்கள் மனதில் நினைத்திருப்பார். 

அவரின் மறைவுக்குப் பின்னர் ஆஸ்பிரின் வேறு எதற்கெல்லாம் பயன்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் இந்த மருந்து 'இதயத்தை' காக்கும் அற்புதம் என்பதை 1948 - ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். 

ஆம் ... மாரடைப்பு வந்தவுடன் இம்மருந்தை உபயோகித்தால் இதயத்தை காக்கலாம் என்பதை உணர்ந்த மருத்துவ உலகம் இதை இதய நோயாளிகளுக்கு சிபாரிசு செய்கிறது. இது உண்மையும் கூட. 

நெஞ்சுவலி, இதய நோயாளிகளுக்கு ஆஸ்பிரின் கலந்த (உம்.எக்கோஸ்பிரின்) மாத்திரைகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.. இதயத்தை காக்கும் ஆஸ்பிரின் தந்த மகானை என்றும் போற்றுவோம்.

Previous Post Next Post