மின்னியல் துறை அறிமுகம்:
மின்துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாய் இருப்பவை டிரான்ஸ்ஃபார்மர், இன்டக்ஷன் மோட்டார், திரிபேஸ் லைன் (எ) மும்முனை மின்முறை, செயற்கை மின்னல், டெஸ்லா சுருள், மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் போன்றவைகள். இவைகளை கண்டுபிடித்து உலகிற்கு என்றும் எப்போதும் மின்சாரம் தடையின்றி கிடைக்கச் செய்த சாதனை நாயகன் நிக்கோலா டெஸ்லா.
மின்துறை, இயந்திரத்துறை, இவைகளில் சாதனை படைத்த நாயகனான இவர் 1856 - ஆம் ஆண்டு, ஜூலை 10 - ம் தேதி இன்றைய குரோவாசியா முன்னாள் ஆஸ்திரிய பேரரசுவின் (சமில்ஜான்) ல் பிறந்தார். தந்தை மிலுடின் டெஸ்லா, தாய் டியூகா டெஸ்லா, தந்தை ஆர்தோடக்ஸ் பிரிஸ்ட் பாதிரியார்.
நிக்கோலா டெஸ்லாவின் இளமைப் பருவம்:
தெய்வ பக்தி கொண்ட குடும்பம். எந்த நேரமும் வீட்டில் ஜெபக்கூட்டம் நடந்து கொண்டிருக்கும். பிள்ளை வளர்ந்ததும் அவரை பிரைமரி பள்ளியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஜெர்மன், மதம் சம்பந்த பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இப்பாடங்கள் அவரின் கருத்தைக் கவரவில்லை. அவருக்கு மின்சார துறை மீதே ஆர்வம் ஏற்பட்டது, குறிப்பாய் மழைக்காலத்தில் 'மின்னலின்' தாக்குதலை ஆர்வத்தோடும், ஆசையோடும் பார்ப்பார்.
பின்னர் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை ஹையர் ரியல் ஜெம்நிஸியத்தில் (Higher Real Gymnatium) முடித்த அவர் கிரேஸ் யூனிவர்சிடி ஆப் டெக்னாலஜி கல்லூரியில் மின்னியல் பட்டப் படிப்பை முடித்தார். அவரின் அறிவுத்திறனால் டெலிபோன் கம்பெனியில் 'இஞ்ஜினியராக' சேர்ந்தார். அங்கு அவர் மற்றவர்களைப்போல சராசரியான இஞ்ஜினியராக இல்லாமல் புதியன கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ளவராக இருந்தார்.
நிக்கோலா டெஸ்லாவின் கண்டுபிடிப்புகள்:
அங்குதான் அவர் இன்றைய இன்டக்ஷன் மோட்டாருக்கான விதையை விதைத்தார். நீரின் அழுத்தத்தின் மூலம் மின்சாரத்தை தயார் செய்யலாம் என்பதையும், அதனை பல மைல் தூரத்திற்கு எடுத்துச்சென்று பயன்படுத்தலாம் என்பதையும் நிரூபித்துக் காண்பித்தார். உலகின் மிகவும் பிரபலமான நீர்வீழ்ச்சியான 'நயாகரா'வின் கொட்டும் நீரில் உயர்அழுத்த மின்சாரத்தை தயார் செய்தார்.
அந்த மின்சாரத்தை 100 மைல்களுக்கு அப்பாலும் பயன்படுத்தும் முறையையும் செயல்படுத்தி உலகை வியக்க வைத்தார். இவரின் மின் அறிவை பயன்படுத்திக் கொள்ள உலக கண்டுப்பிடிப்புகளின் மேதை தாமஸ் ஆல்வா எடிசன் விரும்பி டெஸ்லாவை அழைத்தார்.
தன்னால் உருவாக்கப் பெற்ற டைனமோ அதிக செலவை ஏற்படுத்துவதாகவும், அடிக்கடி ஸ்டிரைக் ஆகி நின்று ஓட மறுப்பதாகவும் அதை சரி செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவர் கேட்டுக்கொண்டபடி செய்து கொடுத்தார். எடிசன் நேர் மின்சார வினியோக அமைப்பை உருவாக்கி இருந்தார். இவர் அந்த அமைப்பிலிருந்து முன்னேற்றம் தரும் மின் அமைப்பை உருவாக்கினார்.
இன்று பெரிய பெரிய தொழிற்சாலைகள்... மாடி வீடுகளுக்கு மூன்று திசை மின் அமைப்பை இணைப்பாக கொடுக்கின்றனர். இதனை த்ரி பேஸ் லைன் (Three Phase Line) என்று அழைக்கிறார்கள். இந்த மூன்று நிலை அமைப்பை முதன்முதலில் உருவாக்கிய மின்னியல் மேதை இவரே. இஃது மட்டுமின்றி மின் உற்பத்தி செய்யப்படும் ஜெனரேட்டரையும் இவர் சில ஆண்டு ஆய்வுகளில் கண்டுபிடித்து இவ்வுலகத்திற்கு வழங்கினார்.
இதன் பின்னர் மின்சாரத்தை ஓரிடத்தில் சேமித்து , அதை அழுத்தத்தோடு வெளியே அனுப்பும் புதிய சாதனத்தை கண்டு பிடித்தார். அதற்கு டிரான்ஸ்ஃபார்மர் என்று பெயரிட்டார். இன்று இச்சாதனமில்லாத மின்துறை உலகில் எங்கும் இல்லை. இவரின் புதுமையான கண்டுபிடிப்பானது 'டெஸ்டிரியல் ஸ்டேஷனரி வேவ்ஸ்' என்பதாகும். மேலும் இவரது முக்கிய கண்டுபிடிப்பு டெஸ்லா சுருள் (Tesla Coil) என்பதாகும் .
இந்த சுருளின் செயல் மிகவும் அற்புதமானது. இதிலுள்ள 120 வோல்ட் மாற்று திசை மின்சாரத்தை 1000 த்திற்கு மேலான கிலோ வோல்ட் சக்தி கொண்ட டிரான்ஸ்ஃபார்மருக்கும் அதோடு இணைந்து இயங்கும் மின் இணைப்புக்கும் எடுத்துச் செல்வதோடு மட்டுமின்றி, பல லட்சத்திற்கான வோல்ட் மின்சாரத்தை எரிமலை சிதறல்போல பரவச் செய்கிறது. இந்த அதிசயத்தை இன்றும் அவரின் அருங்காட்சியகத்தில் காணலாம்.
நிக்கோலா டெஸ்லாவின் மறைவு :
மேலும் இவர் உலகமே வியக்கும் செயற்கை மின்னலை செயல்படுத்தினார். மின்னியல் துறைக்கு பல கண்டுபிடிப்புகளை வழங்கிய மேதையான டெஸ்லா 1943 - ஆம் ஆண்டு , ஜனவரி 7 - ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். ஜெனரேட்டர், டிரான்ஸ்ஃபார்மர் இவைகள் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டே இருக்கும்.