தமிழகத் துறைமுகங்கள்
தமிழ்நாட்டில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் மூன்று பெரிய துறைமுகங்களும், நாகப்பட்டினத்தில் ஒரு நடுத்தர (Intermediate Port) துறைமுகமும், மேலும் ஏழு சிறிய துறைமுகங்களும் உள்ளன.
தமிழ்நாட்டின் பெரிய துறைமுகங்கள் :
1. சென்னை துறைமுகம்
2. எண்ணூர் துறைமுகம்
3. தூத்துக்குடி துறைமுகம்
தமிழ்நாட்டின் நடுத்தர துறைமுகம்
1. நாகப்பட்டினம்
தமிழ்நாட்டின் சிறிய துறைமுகங்கள்
1. இராமேஸ்வரம்
2. கன்னியாகுமரி
3. கடலூர்
4. கொளச்சல்
5. காரைக்கால்
6. பாம்பன்
7. வாலிநொக்கம்
சென்னை துறைமுகம் :
இது இந்தியாவின் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும். (முதலாவது பெரிய துறைமுகம் - மும்பை துறைமுகம்).
இது அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற சென்னை துறைமுகக் கழகம் ஓர் செயற்கைத் துறைமுகமாகும்.
இது தற்போது உலகின், 86-ஆவது பெரிய சரக்குப்பெட்டக (Container Port) துறைமுகமாக விளங்குகிறது.
கடந்த 2007-ஆம் ஆண்டு இத்துறைமுகத்தின் 125 -ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
எண்ணூர் துறைமுகம் :
இது 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டது, இது இந்தியாவின் முதலாவது கார்ப்பரேட் துறைமுகம் (Corporate Port) ஆகும். (பொதுத்துறை நிறுவனமாக அறிவிக்கப்பட்ட முதலாவது துறைமுகம்).
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இது 1974-ஆம் ஆண்டு ஜூலை 11 - ஆம் நாள் இந்தியாவின் பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
இது தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகமாகவும் இந்தியாவின் 4-ஆவது பெரிய சரக்கு பெட்டக முனையமாகவும் விளங்குகிறது. (முதலாவது கொச்சி சர்வதேச சரக்குப் பெட்டக முனையம், இரண்டாவது ஜவஹர்லால் நேரு துறைமுகம்- மும்பை, மூன்றாவது சென்னை துறைமுகம்) இது ஓர் செயற்கை துறைமுகமாகும்.
இது தமிழகத்தின் இரண்டாவது அனைத்து காலநிலை துறைமுகம் (All Weather Port) ஆகும்.
சேதுசமுத்திரக் கால்வாய் திட்டம் :
பாக்நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் ஆகும்.
இத்திட்டம் நிறைவடைந்தால் கப்பல்கள் இந்தியப்பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேது கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும்.
இத்திட்டத்தினால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்குக் கடற்கரைப் பகுதிகளுக்கு இடையேயான தூரம் 424 கடல்மைல்கள் வரை குறையும். மேலும் பயண நேரத்தில் 30 மணிநேரம் குறைய வாய்ப்புள்ளது.
இக்கால்வாய் 300 மீட்டர் அகலமும், 12 மீட்டர் ஆழமும், 167 கிலோ மீட்டர் நீளமும் கொண்டதாகும்.
இராமர் பாலம் அருகே 35 கி.மீட்டர் நீளத்திற்கம், பாக் நீரிணைப்பு பகுதியில் 54 கி.மீ நீளத்திற்கும் அகழ்வுப் பணி மேற்கொள்ளப்படும். போதிய ஆழமுள்ள 78 கி.மீ பகுதி ஆழப்படுத்தப்படமாட்டாது.
10 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயின் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படும்.
இக்கால்வாயில் செல்லும் கப்பல்கள் 8 கடல்மைல் வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படும்.
33 மீ அகலமும், 215 மீ நீளமும், 30,000 டன் கொள்ளளவும் கொண்ட கப்பல்கள் இக்கால்வாயைப் பயன்படுத்தலாம்.
திட்ட வரலாறு :
1860 - இந்திய கடற்படையைச் சேர்ந்த ஆங்கிலேயரான ஏ.டி.டெய்லரின் சிந்தனையில் இத்திட்டம் உருவானது.
1861 - டௌன்செண்டு (Towsend) அவர்களின் முன்மொழிவு.
1863 - மதராஸ் ஆளுநராக இருந்த சர் வில்லியம் டெனிசன் அவர்களின் முன்மொழிவு.
1871 - ஸ்டோடார்ட் (Stoddard) அவர்களின் முன்மொழிவு.
1872 - துறைமுகப் பொறியியலாளர் ராபர்ட்சன் அவர்களின் முன்மொழிவு.
1884 - சர்ஜான் அவர்களின் தென்னிந்திய கப்பல் கால்வாய்த் துறைமுகம் மற்றும் நிலக்கரி நிலையம் (South India Ship Canal Port and Coaling Station Ltd) என்பதற்கான முன்மொழிவு.
1903 - தென்னிந்திய இரயில்வே பொறியியலாளர்கள் முன்மொழிவு.
1922 - துறைமுகப் பொறியாளராக இருந்த சர் ராபர்ட் ப்ரிஸ்ட்டோ இத்திட்டத்தை பரிந்துரை செய்தார்.
1955 - ஜவகர்லால் நேரு நியமித்த இராமசாமி முதலியார் தலைமையிலான “சேது சமுத்திர திட்டக்குழு'' 998 லட்சம் ரூபாய்க்கான திட்ட மதிப்பீட்டை சமர்பித்தது.
1983 - இந்திராகாந்தி நியமித்த லட்சுமிநாராயணன் குழு 282 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரித்தது.
2005 - ஜூலை 2 அன்று மதுரையில், பிரதமர் மன்மோகன்சிங் அவர்களால் இத்திட்டப் பணிகள் துவக்கப்பட்டது.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து :
தமிழ்நாட்டில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து வேதாரண்யம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய் மற்றும் கூவம் நதி போன்றவற்றில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் தற்போது இவை பயன்பாட்டில் இல்லை.
கூவம் நதி இது சென்னையிலிருந்து ஆந்திர மாநில எல்லை வரை முன்புபோக்குவரத்து பயன்படுத்தப்பட்டது. இது தற்போது மாசடைந்து சென்னை மாநகரின் கழிவுநீரை சுமந்து செல்லும் சாக்கடையாக மாறியுள்ளது.
பக்கிங்காம் கால்வாய் :
இது தமிழகத்தின் ஆளுநராக இருந்த பக்கிங்காம் என்பவரால் ஏற்படுத்தப்பட்டதால், அவர் பெயரிலேயே பக்கிங்காம் கால்வாய் என்று அழைக்கப்படுகிறது.
இது சோழமண்டல கடற்கரைக்கு இணையாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ஆந்திரமாநிலத்திலுள்ள பெத்தகஞ்சம் என்ற இடம் வரை நீண்டுள்ளது. இது 420 கி.மீ. நீளம் கொண்டதாகும்.
வேதாரண்யம் கால்வாய் :
இது வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு உப்பு கொண்டு வருவதற்காக 1867 - இல் அமைக்கப்பட்டது. இது தமிழகத்தின் பழமையான கால்வாய் ஆகும்.