தமிழக வனவளம் (Forests in Tamil Nadu)

தமிழ்நாட்டில் 22877 ச.கி.மீ. பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளன. இது தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 17.59% ஆகும். தேசிய வனக்கொள்கை 1988-இன்படி மாநிலமொன்றின் புவிப்பரப்பளவில் 33.33% வனங்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 22877 ச.கி.மீ. பரப்பளவில் காடுகள் அமைந்துள்ளன. இது தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 17.59% ஆகும்.

தமிழ்நாடு வனத்துறையானது, மதராஸ் வனத்துறை என்ற பெயரில் 1855-ஆம் ஆண்டு டாக்டர் ஹக் பிரான்சிஸ் கிளெகார்ன் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தின் வனக்கொள்கை மற்றும் வனத்துறையின் செயல்பாடுகள், தேசிய வனக்கொள்கையைச் சார்ந்து அமைந்துள்ளன.

வனச்சட்டங்கள்

வனக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏற்படுத்தப்பட்ட வனச்சட்டங்கள்

தமிழ்நாடு வனச்சட்டம் - 1882 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் -1949 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

தமிழ்நாடு மலைப்பகுதி (மரங்கள் பாதுகாப்பு) சட்டம் - 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது‌.

வனவுயிரினப் பாதுகாப்புச் சட்டம் - 1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

தமிழ்நாடு வனப் பாதுகாப்புச் சட்டம் - 1980 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

பல்லுயிரினப் பரவல் சட்டம் - 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் வகைகள்

பொதுவாக வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் மண்வகை ஆகியவற்றிற்கு ஏற்ப இயற்கை தாவரங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். அவை,

1. அயன மண்டலப் பசுமை மாறாக் காடுகள்

2. அயன மண்டல அகன்ற இலைக் காடுகள்

3. முட்புதர் காடுகள்

4. சதுப்புநிலக் காடுகள்

5. மலையகக் காடுகள்

1. அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்

இக்காடுகள் பெயருக்கு ஏற்றவாறு என்றும் பசுமை மாறாதவை. மற்றும் இலைகளை உதிர்க்காதவை ஆகும். எப்பொழுதுமே இக்காடுகளின் மரங்களில் இலைகள் இருப்பதால் பசுமை மாறாக் காடுகள் என அழைக்கப்படுகின்றன. ஆண்டிற்கு 200 செ.மீ மேல் மழைப்பொழிவு இருக்கின்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் நீலகிரி, ஆனைமலைச் சரிவுகளிலும், கடலோரப் பகுதிகளிலும் இக்காடுகள் காணப்படுகின்றன. எபோனி, தேக்கு, செம்மரம், கருங்காலி போன்ற மரங்கள் இங்கே காணப்படுகின்றன. இவை சராசரியாக சுமார் 60 மீட்டர் உயரம் வரை வளரும்.

2. அயன மண்டல அகன்ற இலைக் காடுகள்

ஆண்டிற்கு 100 செ.மீ. முதல் 200 செ.மீ வரை மழைப்பொழிவு இருக்கின்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சரிவில் பெரும்பான்மையாக இக்காடுகள் காணப்படுகின்றன. இவை பருவக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

கோடைக்காலத்தில் ஈரப்பத இழப்பைத் தவிர்க்க இக்காடுகளில் உள்ள மரங்கள் இலைகளை உதிர்த்துவிடுகின்றன. சால், சந்தனம், தேக்கு, மூங்கில், படாக் ஆகியவை குறிப்பிடத்தக்க அயன மண்டல அகன்ற இலை வகையை சார்ந்த மரங்கள் ஆகும்.

3. முட்புதர் காடுகள்

நீண்ட வறண்ட காலமும், குறைவான மழைப் பொழிவும் உள்ள இடங்களில் இவை காணப்படுகின்றன. சிதறிய குட்டையான மரங்களும், புதர்களும் இக்காடுகளில் காணப்படுகின்றன.

வறண்ட கால நிலையை எதிர் கொள்ளும் வகையில் இவ்வகை காடுகளில் உள்ள தாவரங்கள் ஆழமான வேர்களையும், கனமான தண்டு மற்றும் சதைப்பற்றுள்ள இலைகளையும் கொண்டுள்ளன.

4. சதுப்புநிலக் காடுகள்

அயன மண்டல, உப அயன மண்டலப் பகுதிகளில் அதிக உப்பளவு நீர் கொண்ட ஓதப் பெருக்கு பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.

சதுப்பு நிலக் காடுகள் மாங்குரோவ் காடுகள், அலையாத்தி காடுகள் மற்றும் சுரபுன்னைக் காடுகள் என்றும் பலவாறு அழைக்கப்படுகிறது. இங்கே சுந்தரி மரங்கள் காணப்படுகின்றன. இவை கடலரிப்பைத் தடுக்கவும், வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

ஆற்று முகத்துவாரம் மற்றும் ஒதப் பெருக்கு அதிகம் உள்ள கடலோரப் பகுதிகளில் சதுப்பு மரங்கள் செறிந்து வளர்கின்றன. இவற்றுள் பிச்சாவரம் சதுப்பு காடுகள் மாநிலத்தின் மிக முக்கிய பெரிய காடுகளாகும். பிச்சாவரம் சதுப்பு நிலக் காடுகள் 25 ச.கி.மீட்டர் பரப்பிலும், கோடியக்கரையில் 17 சதுர கிலோ மீட்டர் பரப்பிலும் பரவியுள்ளன. 

5. மலையகக் காடுகள்

மழைப்பொழிவு அதிகமாக உள்ள மலைச்சரிவுகளில் இக்காடுகள் காணப்படுகின்றன. இவ்வகையான மலையகக் காடுகள் தமிழகத்தில் ஆனைமலைப் பகுதியிலும், நீலகிரி மலைகளிலும் காணப்படுகிறது. மரங்களை தவிர்த்து சிறிய புதர் வகைகள், ஏறு கொடிகள் மற்றும் படரும் கொடி வகைகள் இங்கு செறிந்து காணப்படுகின்றன.

தமிழ்நாட்டின் காடுகளின் பரவல்

தமிழகத்தில் காடுகள் மேற்கு மலைத்தொடர் மற்றும் பிற மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.

மாநிலத்திலேயே நீலகிரி மாவட்டம் அதிக சதவீத நிலப்பரப்பை காட்டுப் பகுதியாக கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி, தருமபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களும் அதிக அளவிலான காடுகளை கொண்டுள்ளது.

தமிழக மாவட்டங்களில் காடுகளின் பரவல் சதவீதம் சமமற்ற நிலையில் காணப்படுகிறது. தமிழக மேற்கு மாவட்டங்களிலும், வேலூர் மாவட்டத்தின் ஜவ்வாது மலைக் குன்றுகளிலுமே காடுகளின் அடர்த்தியைக் காண முடிகின்றது.

நீலகிரி மாவட்டத்தின் மொத்தப் பரப்பில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பரப்பு, காடுகளாகவே உள்ளது. மற்ற மாவட்டங்களில் காடுகள் 1 முதல் 5 சதவீதம் வரை காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், வேலூர் மாவட்டங்களில் சந்தன மரங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் 5,88,000 எக்டேர் பரப்பளவில் சந்தன மரக் காடுகள் உள்ளன.

கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மரங்கள் அடர்ந்துக் காணப்படுகின்றன.

மதுரை, கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படும் அடர்த்தியான மரங்கள் எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகிறது. கற்பூர மற்றும் தைல மரங்களுக்கு நீலகிரி மாவட்டம் பெயர் பெற்றதாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரின் அடிவாரம் மற்றும் திருநெல்வேலி, மதுரை மாவட்டங்களில் செறிந்து காணப்படும். மரங்கள் தீக்குச்சிகள் செய்யப் பயன்படுகின்றது.

கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படும் கடின மரங்கள் கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கிடைக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன.

திருநெல்வேலி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தீக்குச்சி தயாரிப்பதற்கான மரங்கள் வளர்கின்றன. தமிழ்நாட்டில் வளரும் அரசமரம், நாவல்மரம், நெல்லிமரம், பலாமரம் போன்றவை அதிக நீரைச் சேமிக்கின்றன.

குறிப்பு :

தமிழ்நாட்டில் காடுகள் அதிகம் கொண்ட மாவட்டம் - நீலகரி (53.13%) 

தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டம் திருவாரூர் (0.01%)

தமிழ்நாட்டில் காடுகள் அதிகம் கொண்ட மாவட்டங்கள்

1. நீலகிரி (53.12%)

2. சேலம் (37.68%)

3. வேலூர் (31.67%)

4. கன்னியாகுமரி (31.54%)

தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள்

1. திருவாரூர் (0.01 %)

2. இராமநாதபுரம் (1.27%)

3. தூத்துக்குடி (1.52 %)

4. கடலூர் (1.80 %)

தமிழ்நாட்டில் மழைக்காடுகள், மாஞ்சோலை, களக்காடு, டாப்ஸ்லிப், சோலையார், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன.

இம்மழைக்காடுகளை மக்கள் 'சோலைக்காடு' என்று அழைக்கின்றனர். தமிழ்நாட்டில் 3000-த்திற்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன. அவற்றுள் பெரும்பான்மையானவை அகன்ற இலை, கலப்பினக் காட்டுப் பகுதியில் காணப்படுகின்றன.

கொடைக்கானல் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிமலர் ஒரு குறிப்பிடத்தக்க தாவர இனமாகும். எனவே தான் இம்மலரை தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்து பெருமைப்படுத்தி உள்ளது.

பழனி மலை மற்றும் குற்றால மலைப் பகுதிகளில் மருத்துவ மூலிகைகள் மிகுந்து காணப்படுகின்றது.

பனைமரம் வளர்த்தல் திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளின் உப தொழிலாக விளங்குகிறது. அரிய வகை மணம் மிக்க சந்தன மரங்கள் வேலூர் மாவட்டத்தின், ஜவ்வாது மலைப்பகுதியில் அடர்ந்து வளர்கின்றன.

வனவிலங்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் “வன மகோத்சவம்" என்ற விழா எடுக்கப்படுகிறது.

Previous Post Next Post