திரு.வி.கலியாணசுந்தரனார் (Thiruvarur Viruttachala Kalyanasundaram) வாழ்க்கைச் சுருக்கம் :
காஞ்சிபுரம் மாவட்டத்துச் சைதாப்பேட்டை வட்டத்துத் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன் வணிகமும் புரிந்தவர். இவர் பச்சையம்மாள் என்பவரை மணந்து மூன்று ஆண்களையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றார்.
இவ்வம்மையார் இறந்த பின்னர் சின்னம்மாள் என்பாரை மணந்து நான்கு ஆண் மக்களையும் நான்கு பெண் மக்களையும் பெற்றார். இவர்களுள் ஒருவரே கல்யாணசுந்தரனார்.
கல்வி :
தொடக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில் இராயப்பேட்டையில் தங்கி ஆரியன் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தார். அதன் பின்னர், 1894 இல் வெஸ்லி பள்ளியீல் நான்காம் வகுப்பில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஒரு காலும் ஒரு கையும் மூடங்கின.
இதனால் பள்ளிப் படிப்பு சிறிது. காலம் தடைப்பட்டது. படிப்பில் நல்ல திறமையுடையவராக விளங்கினார். 1904 ஆம் ஆண்டில் ஆறாம் படிவத் தேர்வு எழுத முடியாமல் போனது. அத்தோடு அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது.
தமிழ்க் கல்வி :
வெஸ்லி பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை என்ற தமிழறிஞரிடம் நட்பு ஏற்பட்டது. அவரிடம் தமிழ் பயிலத் தொடங்கினார். அவரிடம் தமிழ் நூல்களை முறையாகப் பயின்று சிறந்த புலமை பெற்றார். கதிரவேற்பிள்ளை நீலகிரிக்குச் சென்ற பொழுது அங்கு காலமானார். அதன் பின்னர் கல்யாணசுந்தரனார் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ், மற்றும் சைவ நூல்களையும் பாடம் கேட்டார்.
ஆசிரியர் பணி :
1906 ஆம் ஆண்டில் ஸ்பென்சர் தொழிலகம் என்ற ஆங்கில நிறுவனத்தில் கணக்கர் ஆகச் சேர்ந்தார். அக்காலத்தில், பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். பின்னர் 1909 இல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
அப்போது அவருக்குத் திருமணம் நடந்தது. அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். 1918 ஆம் ஆண்டிற்குள் தம் மனைவி, பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியரானார். இராயப்பேட்டை வெஸ்லி கல்லூரியில் தலைமை ஆசிரியராகச் சேர்ந்தார். நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார்.
பத்திரிகைப் பணி :
பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார். அதன் பின்னர் திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத்தொண்டாற்றினார்.
அரசியல் பணி :
தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்- களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டார். சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.