நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (Netaji Subhas Chandra Bose)
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose) ஜனவரி 23, 1897 இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகஸ்ட் 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிஅப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
பிறப்பு :
இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் வங்காள இந்து குடும்பத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.
இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாகப் பிறந்தவரே சுபாஷ் சந்திரபோஸ். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
கல்வி :
ஐந்து வயதான போது கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர் தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் 1913ஆம் ஆண்டுத் தேர்வில் கொல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார்.
இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார்.
இதனால் ஞான மார்க்கத்தின் பால் ஈடுபாடு கொண்டார் துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன் தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ் தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.
அப்போது வாரணாசியில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி பிரம்மானந்தரைச் சந்தித்தார். இவருக்கு சுபாஷின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து பின்னாளில் தனது நண்பரான திலீப் குமார் ராயிடம், "யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது. எனக்கும். அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது.
அதனால் தான் என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து அதன் பலனைப் பெற விரும்புகிறேன். இன்னொன்றும் சொல்லிவிடுகிறேன் அதே ராக்கால் மகராஜ் (சுவாமி பிரம்மானந்தர்) வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
தன் மானசீக ஆசானாக விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார். துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ் ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால் தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் சேர்ந்தார்.
அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எப். ஒட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில் பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார்.
இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக சுபாஸ் சந்திர போஸும் அவரது நண்பர்களும் கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன் இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்..
இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ் மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
சுதந்திரப் போரில் ஈடுபாடு :
வழக்குரைஞரான சி. ஆர். தாஸ் தன் தொழிலை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ் கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம் தான் தாய் நாடு திரும்பியதும் இந்திய சுதந்திரப் போரில் பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார்.
அதை ஏற்று சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால் தான் ஏற்றுகொள்வ- தாகவும் பதவி துறந்ததைப் பாராட்டியும் சி. ஆர். தாஸும் மறுகடிதம் அனுப்பினார்.
இக்காலகட்டத்தில் தான் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த காந்தியும் இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும் காங்கிரசின் தலைமையின் கீழ் சுதந்திர எழுச்சி பெற்றிருந்தனர்.
1921 ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ் மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார்.
போஸ் சித்தரஞ்சன்தாஸின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்று கொண்ட சி.ஆர்.தாஸும் அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன் திறமைமிக்க அவரது குடும்ப பின்னணியையும் அறிந்திருந்தார்.
இதனால் சி.ஆர்.தாஸ் தான் நிறுவிய "தேசியக் கல்லூரியின்" தலைவராக 25 வயதே நிரம்பிய போஸை நியமித்திருந்தார்.
லண்டனில் கேம்பிரிட்ஜில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார்.
அரசியல் நுழைவு :
1922 இல் வேல்ஸ் எனும் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த பிரித்தானிய இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர்.
மும்பை துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு முழுதும் எதிர்க்க காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கில அரசாங்கம் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும் வேல்ஸ் இளவரசர் கொல்கத்தாவுக்கு வருகை தரும் போது கல்கத்தாவில் மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்து.
கொல்கத்தா தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு போஸின் தலைமையிலான தொண்டர் படையை சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும் சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது.
மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் ஜவகர்லால் நேரு,சித்தரஞ்சன் தாஸ் போன்றோரும் கைதானார்கள்.
அரசியல் பணி :
காங்கிரஸ் ஜனநாயக கட்சியின் "பார்வட்" எனும் ஆங்கில இதழில் ஆசிரியாரான நேதாஜி உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும், கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது.
1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும் மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும் தெரிந்தெடுக்கப் பட்டனர். கொல்கத்தா நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.
இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஒர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் நாள் கைது செய்து கொல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது: மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியை கவிழ்க்க சதிகார இயக்கம் ஒன்று தோன்றி இருப்பதையும் அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது.
நேதாஜிக்கு ஆதராவாய் மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். கொல்கத்தாவிரைந்த காந்தி உட்பட பல தலைவர்களும் நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர்.
இச்சமயத்தில் தான் சுயராஜ்ஜியக் கட்சி சட்டசபைகளில் வெற்றி பெற்று ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும் பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி "சட்டசபை வெளியேற்றம்” எனும் கொள்கையைக் கைவிட்டு சுயராட்சிய கட்சியின் கொள்கையே காங்கிரசின் கொள்கை எனக் கூறி இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.
போஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும் அவரை கடல் கடந்து மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால் அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது. நோயின் தீவிரம் அதிகரித்ததால் சுபாஷும் படுத்த படுக்கையானார்.
ஆனால் அரசு மருத்துவ பரிசோதனைக்கு கூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால் காங்கிரசு அவரை வெளிக்கொணர ஒரே வழி 1926 ஆம் ஆண்டு தேர்தலில் நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது நேதாஜியும் தன் சேவையைக் கருதி அதற்கு உடன் பட்டார்.
இதனால் சிறையிலிருந்தவாறே வேட்பாளர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அனால் அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நேதாஜி வெற்றி பெற்றார்.
இதனால் சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து நேதாஜியைப் படுக்கையில் தள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும் "அவர் சிறையிலேயே, மரணித்து விட்டார் " என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம் அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது.
ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி அவர் இனி பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம் அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும் படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும் 1930 சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்.