தமிழக இதழியல் வரலாறு

தமிழ்நாட்டில் செய்தித் தாள்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்து, தமிழர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் செய்தித் தாள்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்து, தமிழர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது.

இந்தியாவில் அச்சுக் கூடங்களை அமைப்பதிலும், செய்தி நிறுவனங்களை நிறுவுவதிலும் ஐரோப்பியர்களே முன்னோடிகளாக விளங்கினர்.

இந்தியாவில் புன்னக்காயல், தரங்கம்பாடி, பம்பாய், சென்னையிலுள்ள வெப்பேரி ஆகிய இடங்களில் அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் முதல் அச்சுக்கூடம் 1711-இல் கிறித்தவப் பாதிரிகளால் அமைக்கப்பட்டது.

இந்தியாவிலேயே முதன் முதலாக 1780-ஆம் ஆண்டு ஜனவரி 29-இல் "பெங்கால் கெஜட்'" என்ற ஆங்கிலப் பத்திரிகை வெளியிடப்பட்டது. இது ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயரால் தொடங்கப்பட்டது. இது அரசியல் சார்பில்லாத ஒரு வாரப்பத்திரிகையாகும்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக 1785-ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் "மெட்ராஸ் கூரியர்'' என்ற ஆங்கிலப் பத்திரிகையை வெளியிட்டார். இது ஒரு அரசு சார்புடைய இதழாகும்.

1795-ஆம் ஆண்டு வில்லியம்ஸ் என்பவர் "மெட்ராஸ் கெஜட்' மற்றும் "இந்தியன் ஹெரால்டு" ஆகிய இதழ்களை வெளியிட்டார்.

1802-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியிடப்பட்ட "சிலோன் கெஜட்'' என்ற பத்திரிகையே முதலாவது தமிழ் பத்திரிகையாகும்.

சென்னை கிறித்துவ சமய சங்கமானது 1831-ஆம் ஆண்டு “தமிழ் பத்திரிகை” என்ற மாத இதழைத் தொடங்கியது. இதுவே சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் தமிழ்ப் பத்திரிகையாகும்.

இதனைத் தொடர்ந்து 1833 -இல் "ராஜவிருத்தி போதினி" என்ற இதழ் சென்னையில் தொடங்கப்பட்டது. 1836-இல் ஜே ஆக்டர்லோனி என்பவர் "தி ஸ்பெக்டேட்டர்" என்ற ஆங்கில நாளிதழை ஆரம்பித்தார்.

1840-இல் நாகர்கோவிலிலிருந்து சுவிசேஷ பிரபாவ விளக்கம் என்ற இதழும்,1841-இல் டில்லியிலிருந்து ஜனசினேகன் என்ற இதழும் தொடங்கப்பட்டன.

1844ஆம் ஆண்டு கஜூலு லட்சுமணராசு செட்டி "கிரசன்ட்" என்ற இந்துசமய ஆதரவு இதழைத் தொடங்கினார். "நற்போதம்" என்ற இதழ் 1849-ஆம் ஆண்டு திருநெல்வேலியிலிருந்து வெளியிடப்பட்டது. 1855இல் தினவர்த்தமானி என்ற இதழ் சென்னையில் தொடங்கப்பட்டது.

முதன் முதலாக இந்துசம சார்புடைய “கலாவர்த்தினி" என்ற மாத இதழ் 1866- இல் சென்னையில் தொடங்கப்பட்டது. திருவல்லிக்கேணி இலக்கிய சங்கத்தின் உறுப்பினர்களில் ஆறுபேர் ஒன்று சேர்ந்து ஜி.சுப்பிரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு 1878 -இல் 'இந்து' என்ற ஆங்கில வார இதழை ஆரம்பித்தனர். 1899-இல் அது நாளிதழாக மாற்றப்பட்டது.

விடுதலை இயக்கத்தின் குரல் தமிழகத்தில் பரவே வேண்டும் என்றால் தமிழில் பத்திரிகை வேண்டும் என்று உணர்ந்த ஜி.சுப்பிரமணிய ஐயர், 1882-ஆம் ஆண்டு "சுதேசமித்திரன்” என்ற வார இதழைத் தொடங்கினார்.

பின்னர் இவரே 1889 -இல் சுதேசமித்திரனை நாளிதழாக மாற்றினார். ஜி.சுப்பிரமணிய ஐயர் தமிழ் பத்திரிகை உலகின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

1904-இல் பாரதியார் சுதேசமித்திரனின் துணை ஆசிரியரானார். பின்னர் 1905 -இல் சுதேசமித்திரனிலிருந்து விலகி 'இந்தியா' என்ற வார இதழைத் தொடங்கினார். அதில் முதன் முதலாக கார்ட்டூன் வெளியிட்டு மக்களைத் தூண்டியவர் பாரதியார்.

1916-இல் சுயாட்சி இயக்கத்தை தொடங்கிய அன்னிபெசன்ட் அம்மையார் தமது கொள்கைகளை பரப்புவதற்காக "நியூ இந்தியா" என்ற தினசரியையும், "காமன்வில்” என்ற வார இதழையும் தொடங்கினார்.

1917-இல் வெளிவந்த திரு.வி.க.வின் “தேசபக்தன்”, தமிழை இதழியலுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்ததோடு, ஆங்கிலத்திலிருந்து நிறுத்தற்குறிகள், சிறு சிறு வாக்கியங்கள், எளிய தமிழ்நடை போன்றவற்றை அறிமுகப்படுத்தியது. 1934-இல் சதானந் என்பவர் "தினமணி' நாளிதழைத் தொடங்கினார்.

"Daily Mirror" என்ற ஆங்கில நாளிதழின் கொள்கைகளைப் பின்பற்றி 'தினத்தந்தி" என்ற தமது நாளிதழின் மூலம் செய்திகளை வெளியிட்டு, தமிழ் இதழியலில் ஒரு புரட்சி செய்தவர் சி.பா.ஆதித்தனார்.

திராவிட இயக்க பத்திரிகைகள் :

தமிழ்நாட்டில் தோன்றிய நீதிக்கட்சி தனது கொள்கைகளைப் பரப்புவதற்காக 'திராவிடன்' என்ற தமிழ் பத்திரிகையையும், 'ஜஸ்டிஸ்' என்ற ஆங்கில பத்திரிகையையும் வெளியிட்டது.

'திராவிடன் திராவிட இயக்க பத்திரிகைகளுக்கு முன்னோடியாக விளங்கியது. ஈ.வெ.ரா.பெரியார் தமது கொள்கைகளை பரப்புவதற்காக ‘பகுத்தறிவு', 'குடியரசு' என்ற இரு இதழ்களைத் தொடங்கினார். - 1935-இல் அண்ணாத்துரையை உதவி ஆசிரியராகக் கொண்டு "விடுதலை" என்ற வாரப்பத்திரிகையைத் தொடங்கினார்.

பேரறிஞர் அண்ணா 1942-ஆம் ஆண்டு “திராவிட நாடு” என்ற தமிழ்வார இதழைத் தொடங்கினார். 1949-இல் தி.மு.க. உருவானபோது அக்கட்சியின் நாளிதழக "நம்நாடு" (1953-1972) வெளிவந்தது. பின்னர் வார இதழாக தொடங்கப்பட்ட 'முரசொலி' தற்போது நாளிதழாக வெளியிடப்படுகிறது.

அ.தி.மு.க. உருவானபோது, அக்கட்சி 'அண்ணா' என்ற இதழை வெளியிட்டது. பின்னர் 'தாஸ்' என்ற பத்திரிகையும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சியின் நாளிதழாக "நமது எம்.ஜி.ஆர்" வெளியிடப்படுகிறது. கம்யூனிசக் கட்சியின் சார்பாக தீக்கதிர் என்ற பத்திரிகை வெளியிடப்பட்டது.

பிற இதழ்கள் :

1937-இல் ஜீவானந்தம் 'ஜனசக்தி' என்ற பொதுவுடைமை இதழை வெளியிட்டார். பின்னர் தாமரை, செம்மலர் போன்ற பொதுவுடைமை இதழ்கள் தோன்றின.

1886-இல் மஹாவிகட தூதன் என்ற பொழுதுபோக்கு இதழ் வெளியிடப்பட்டது.

1928-ஆம் ஆண்டு விகடகவி புதூர் வைத்தியநாத ஐயர் ஆனந்த விஜய விகடன் என்ற இதழை வெளியிட்டார். மேலும் 1941-இல் இவர் விகட ரத்தினம் என்ற இதழையும் வெளியிட்டார். இன்றைய ஆனந்த விகடனை இவரிடமிருந்து விலைக்கு வாங்கியவர் எஸ்.எஸ்.வாசன் ஆவார்.

நகைச்சுவையுடன், கதை, கட்டுரை, துணுக்கு முதலியவை கொண்ட பல்சுவை பொழுதுபோக்கு இதழாக 1870-இல் ஜனவினோதினி வெளிவந்தது.

விவேக போதினி (1908), வித்யா பானு (1909), லோகமித்திரன் (1912) போன்ற இதழ்கள் மக்களிடையே அறிவைப் பரப்பும் நோக்கில் வெளியிடப்பட்டன.

குறிப்பு :

தமிழகத்தின் முதல் நாளிதழ் - மதராஸ் மெயில் (1873)

தமிழகத்தின் முதல் தமிழ் நாளிதழ் - சுதேச மித்திரன் (1882)

தமிழ்நாட்டின் முக்கிய இதழ்கள்

இந்தியாவில் அச்சுக் கூடங்களை அமைப்பதிலும், செய்தி நிறுவனங்களை நிறுவுவதிலும் ஐரோப்பியர்களே முன்னோடிகளாக விளங்கினர்.
Previous Post Next Post