வீரபாண்டிய கட்டபொம்மன் (Veerapandiya Kattabomman)

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் ஆந்திராவிலிருந்து விசயநகர ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு குடிபெயர்ந்து வந்தவர்கள் ஆவர். 

தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர்.


பெயர் காரணம் :

அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டபிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராக பொம்மு என்கிற கெட்டி பொம்மு (தெலுங்கு) இடம்பெற்றிருந்தார்.

இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளை தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின் ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன்.

இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார். இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். 

வாழ்க்கை :

ஜனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். பிப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

கும்பினியார் தங்களுடைய ஆட்சியை நிலைநாட்டிக் கொள்வதற்காக பாளையக்காரர்களிடம் வரி வசூலிப்பது என முடிவு செய்தனர். நெல்லை மாவட்டத்தில் வரிவசூலிக்கும் பொறுப்பை ஏற்றிருந்த ஆங்கிலேய தளபதி மாக்ஸ்வெல்லால் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தாரர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரிவசூலிக்க முடியவில்லை.

இதன் அடிப்படையில் கி.பி. 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய தளபதி ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு பெரும்படையுடன் போரிட வந்தார். 1797 - 1798 இல் நடந்த முதல் போரில் கோட்டையை தகர்க்க முடியாமல் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் ஆலன் துரை தோற்று ஓடினார்.

அதன் பின்னர் நெல்லை மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் துரை வீரபாண்டிய கட்ட பொம்மனைச் சந்திக்க அழைத்தார். கட்டபொம்மனை அவமானப்படுத்த நினைத்து வேண்டுமென்றே பல இடங்களுக்கு வரச்சொல்லி சந்திக்காமல் அலைக்கழித்தார்.

இறுதியில் செப்டம்பர் 10, 1798 இல் இராமநாதபுரத்தில் சந்தித்தார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். அதை முறியடித்து வீரபாண்டியக் கட்டபொம்மன் மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை வந்தடைந்தார்.

செப்டம்பர் 5, 1799 இல் பானர்மென என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார்.

செப்டம்பர் 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டார்.

அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப் - பட்டார். கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும்_சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம். 

பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை :

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதோடு பாஞ்சாலக் குறிச்சியின் வரலாறு முடிந்து விடவில்லை. ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரை 02.02.1801 இல் பாஞ்சாலக் குறிச்சி வீரர்களால் மீட்கப்பட்டார்.

பாஞ்சாலக் குறிச்சிக் கோட்டைக்குப் புத்துயிர் கிடைத்தது. ஊமைத்துரையைக் கைது செய்ய வந்த மேஜர் மெக்காலே கோட்டையினுள் செல்ல முடியாமல் திரும்பினார். அவர் தலைமையில் ஒரு பெரும்படை 30.03.1801 இல் கோட்டையை முற்றுகையிட ஆரம்பித்து 24.05.1801 இல் அதனைக் கைப்பற்றியது.

தப்பி, காளையார் கோவில், விருப்பாட்சி, திண்டுக்கல் என்று ஓடிய ஊமைத்துரையும் அவர் தம்பி துரைசிங்கமும் கைது செய்யப்பட்டு பாஞ்சாலக் குறிச்சி பீரங்கி மேட்டில் தூக்கிலிடப்பட்டனர். கட்டபொம்மன், மற்றும் ஊமத்துரை பற்றிய நினைவு புகைப்படக் கண்காட்சியுடன் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

Previous Post Next Post