முல்லா கதை

ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.

அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு "முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா? என்று கேட்டான்."மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது..அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்" என்றார் முல்லா.

"அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?" என்று முரடன் கேட்டான். உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தார். 

"என்ன சிரிக்கிறீர் என்று முரடன் கேட்டான். "அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் " என்றார் முல்லா. "தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது? என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான்.

முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார்." நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் " என்றார் முல்லா. "முல்லா அவர்களேநீர் வெற்றிபெற்றுவிட்டீர் என்னை மன்னிக்க வேண்டும்" என்று முரடன் தாழ்ந்து அவரை வணங்கினான்.

"அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும்" என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்துவிட்டுமுல்லாதன்வழிநடந்தார்.

Previous Post Next Post