விக்கிரமாதித்தனிடம் வேதாளம் புதிர் கதை கூறுதல் :

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன் மரத்தின் மீதேறிக்கொண்ட வேதாளத்தை மீண்டும் கிழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கிய போது அவ்வேதாளம் தான் ஒரு கதை சொல்லப் போவதாகவும், அக்கதையின் முடிவில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான பதிலை கூறவேண்டும் என்று விக்ரமாதித்தியனிடம் கூறி வேதாளம் கதை சொல்ல ஆரம்பித்தது. "ஒரு ஊரில் ராமன், பீமன், சோமன் என்று மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். இதில் ராமன் சிறந்த கல்வி கற்றவன், பீமன் ஒரு மல்யுத்த வீரன், சோமன் தண்ணீருக்குள் மூழ்கி வித்தைக்காட்டும் தந்திரம் தெரிந்தவன்.

இவர்கள் தங்கள் இந்த திறமைகள் மூலம் அக்கிராமத்தில் பொருளீட்டி வந்தனர். ஒரு சமயம் கிராமத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் இம்மூவரும் பிழைப்பைத் தேடி ஸ்ரீநகர் சென்றனர். இதே காலக்கட்டத்தில் ஸ்ரீநகரில் ஈஸ்வரன் என்ற ஒரு ஜமீன்தாரின் வீட்டிற்கு ஒரு துறவி வருகை தந்தார். அவரை வீட்டிற்குள் அழைத்து நன்கு உபசரித்தார் ஈஸ்வரன். இதனால் மனமகிழ்ந்த அந்தத் துறவி ஈஸ்வரன் தம்பதியினரைப் பார்த்து "உங்கள் மருமகள் கூடிய விரைவிலேயே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள்" என்று ஆசிர்வதித்தார்.

ஒரு ஊரில் ராமன், பீமன், சோமன் என்று மூன்று இளைஞர்கள் இருந்தார்கள். இதில் ராமன் சிறந்த கல்வி கற்றவன், பீமன் ஒரு மல்யுத்த வீரன், சோமன் தண்ணீருக்குள் மூழ்கி வித்தைக்காட்டும் தந்திரம் தெரிந்தவன்.

இதைக் கேட்டு அதிர்ந்த ஈஸ்வரன் தம்பதியினர் தங்களுக்கு குழந்தைகளே பிறக்கவில்லை என்றும், பிறகு எப்படி தங்கள் மருமகள் பேரனைப் பெற்றெடுப்பாள் என்று கேட்டனர். இதைக் கேட்ட அந்தத் துறவி தன்னுடையது தெய்வ வாக்கென்பதால் பொய்க்காது எனவும், நீங்கள் இருவரும் யாரைவாவது ஒரு இளைஞனை உங்கள் மகனாகத் தத்தெடுத்து, அவனுக்குத் திருமணம் செய்தால் நிச்சயமாக அவன் மூலம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை வாரிசு கிடைக்கும் என்று கூறினார்.

சரியாக அதே நேரத்தில் ராமன், பீமன், சோமன் ஆகிய மூவரும் அந்த ஜமீன்தாரின் வீட்டின் கதவைத் தட்டினார்கள். அப்போது அங்கே உள்ளே இருந்த துறவி, அவர்கள் மூவரையும் வீட்டிற்குள் அழைத்தார். வந்த மூவரும் தாங்கள் யாரென்றும், எதற்காக ஸ்ரீநகருக்கு வந்தோம் என்பதற்கான காரணத்தை துறவி மற்றும் ஈஸ்வரனிடம் விளக்கினார். இதைக் கேட்டு சற்று யோசித்த அந்த துறவி அவர்களுக்கு ஒரு யோசனையைக் கூறினார்.

அதாவது இந்த ஈஸ்வரன் என்ற ஜமீன்தாரின் மனைவிக்கு குழந்தைப் பிறக்க "தசரத மலையிலிருக்கும் வஷிஷ்ட மரத்திலிருந்து கிடைக்கும் பழத்தை உண்டால் அவள் கர்பமடைவாள் என்றும், அந்த தசரத மலைக்கு செல்லும் வழி தமக்குத்,தெரியாதென்றும், ஆதலால் அம்மூவரும் ஆளுக்கு ஒரு திசையாகச் சென்று தேடி மூன்று மாதகாலத்திற்குள் யார் அந்த மலையிலிருக்கும் வசிஷ்ட மரத்தின் பழத்தைக் கொண்டுவருகிறார்களோ, அவருக்கு ஜமீந்தார் தன் சொத்தில் பாதியை அவருக்கு எழுதி வைப்பதாகவும் கூறினார் அத்துறவி.

அப்படி அப்பழத்தை மூன்று மாதக் காலத்திற்குள் மூவராலும் அம்மலையைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், அம்மூவரும் ஸ்ரீநகருக்கு திரும்பி விடவேண்டும் என்றும், அப்போது அம்மூவரில் யார் மிகவும் கடினமாக முயற்சி செய்தார்களோ, அவர்களை தன் சுவீகாரப் புத்திரனாக ஜமீன்தார் ஏற்றுக்கொள்வார் என்று கூறினார். இதைக்கேட்ட ராமன் அவர்களிடமிருந்து விடைபெற்று தென்திசையில் பயணித்து, அந்த தசரத மலைக்கு போகும் வழி குறித்து விசாரித்தவாறே சென்றான். அப்போது ஒரு வியாபாரி தனக்கு அம்மலைக்கான வழி தெரியும் என்றும், ஆனால் ராமன் தன்னிடம் சில வாரங்கள் பணிபுரிய வேண்டும் என்றும், பிறகு தான், ராமன் ஒரு அறிவாளி என்று ஏற்றுக் கொண்டால் அம்மலைக்கான வழியை கூறுவதாகக் கூறினான்.

இதை ஏற்ற கல்விமானாகிய ராமன் தன் தகுதிக்கும் கீழான வேலைகளை அவ்வியாபாரி கூறிய படி செய்ய ஆரம்பித்தான். இவை அனைத்தையும் தசரத மலைக்கான வழியை தெரிந்து கொள்ளும் ஒரே நோக்கத்திற்காக பொறுத்துக் கொண்டு செய்தான் ராமன். ஆறு வாரக்காலத்திற்கு பின் அவ்வியாபாரியிடம் தசரத மலைக்கான வழியைக் கேட்டான் ராமன். அதற்கு அவ்வியாபாரி மிகுந்த கல்விமானான ராமன் தன்னிடம் அவன் தகுதிக்கும் கீழான வேலைகளைப் பொறுத்துக் கொண்டு செய்ததால் ராமனைத் தன்னால் அறிவாளியாக ஏற்றுக் கொள்ள முடியாதென்று கூறி அம்மலைக்கான வழியை சொல்லாமல் மறுத்துவிட்டான்.

இதைக் கேட்டு ஏமாற்றமடைந்த ராமன், தன் காலக்கெடுவிற்குள் அப்பழத்தை கண்டுபிடிக்க முயன்றான் அனால் முடியவில்லை அதனால் ராமன் ஸ்ரீநகர் திரும்பினான். மூன்றாமவனான சோமன் தசரத மலையைத் தேடி கிழக்கு திசையில் பயணித்தான். அப்போது அவ்வூரின் மேற்கு திசையை நோக்கி தசரத மலையைத் தேடிச் சென்ற பீமன், அத்திசையிலுள்ள ஒரு ஊரின் மைதானத்தில், தன் மல்யுத்த வித்தையைக் காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினான்.

அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவன் தான் இப்பகுதியிலிருக்கும் "அஞ்சனை மலையை" ஏறிபார்க்க விரும்புவதாகவும், பீமன் தனக்கு துணையாக வந்தால் அம்மலையை தான் ஏற முடியும் என்றும், அங்கே பீமன் தேடும் தசரத மலையும் இருக்க வாய்ப்புள்ளதாக கூறினான். இதை ஏற்று பீமன் அம்மனிதனுக்கு துணையாக சென்று மலையேறும் போது அம்மனிதனை பல இன்னல்களிலிருந்து தன் உடல் பலத்தால் காப்பாற்றினான் பீமன். இவ்வளவு முயன்றும் பீமனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அம்மலையை அடைய முடியவில்லை அதனால் பீமன் மீண்டும் ஊர் திரும்பினான். ஆடிப் பெருக்குத் திருவிழாவில் கலந்து கொண்ட சோமன், தன் தண்ணீர் வித்தையின் "மூலம் அவ்வூர் மக்களின் பாராட்டுகளைப் பெற்றான்.

அப்போது அக்கூட்டத்திலிருந்த ஒருவன் தான் நீண்ட நாட்களாக இவ்வாற்றின் இறுதியிலிருக்கும் "மகரத் தீவிற்கு" செல்ல விரும்புவதாகவும், ஆனால் அத்தீவின் அருகே நீர் நிலைகளில் முதலைகள் அதிகம் இருப்பதால், தனக்கு துணையாக வர மற்றவர்கள் அஞ்சுவதாகவும், சோமன் தனக்குத் துணையாக வந்தால் ஒரு வேளை அவன் தேடும் தசரத மலை அங்கிருக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூறினான். இதை ஏற்று சோமனும் அம்மனிதனுக்குத் துணையாக அத்தீவிற்குச் சென்றான். அத்தீவிற்க்குப் போகும் வழியில் இவ்விருவரையும் தாக்க வந்த முதலைகளிடமிருந்து அம்மனிதனைத் தன் தண்ணீர் வித்தைத் திறனால் காப்பாற்றினான். இந்த சோமனும் தன் காலக்கெடு முடிவதற்குள் தசரத மலையை கண்டுபிடிக்க முடியாததால் இவனும் ஸ்ரீநகர் திரும்பினான்.

பிறகு மூவரும் தாங்கள் அம்மலையைக் கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சியையும், தாங்கள் அனுபவித்த அனைத்தையும் துறவியிடம் கூறினர். இதைக் கேட்டு சற்று நேரம் ஆலோசித்த துறவி "ராமனை தத்துப் பிள்ளையாக ஸ்வீகரிக்குமாறு ஜமீன்தாரிடம்" கூறினார்.

வேதாளம் கூறிய புதிர் கதையிலிருந்து விக்கிரமாதித்தனிடம் கேள்வியை கேட்டது வேதாளம்:

இங்கு இக்கதையை நிறுத்திய வேதாளம் விக்ரமாதித் தியனிடம் "விக்ரமாதித்தியா தசரத மலையைக் கண்டுபிடிக்க பீமனும், சோமனும் தான் மிகவும் கஷ்டப் பட்டனர். சில சமயங்களில் உயிரையே பணயம் வைத்து முயற்சித்தனர். அப்படியிருக்க அத்துறவி ராமனை தங்கள் வாரிசாக ஸ்வீகரிக்குமாறு அந்த ஜமீன்தாரிடம் ஏன் கூறினார்? என்று கேட்டது. சற்று நேரம் யோசித்த விக்கிரமாதித்யன், " பீமனும், சோமனும் தங்களின் திறமை மற்றும் தகுதிகளுக்கேற்ற வேலைகளையே செய்தனர்.

அதனால் அவர்களுக்கு அம்முயற்சிகளில் சிரமம் தெரியவில்லை. ஆனால் சிறந்த கல்விமானாகிய ராமன் தன் தகுதிக்கும் கீழான வேலைகளை, தான் தசரத மலையைக் கண்டுபிடிக்கும் லட்சியத்துக்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு செய்தான். ஆக அம்மூவரில் மிகவும் கடின முயற்சி செய்தவன் ராமன் தான். எனவே ராமனை மகனாக ஸ்வீகரிக்குமாறு ஜமீன்தாரிடம் துறவி கூறியது சரியானது". என்று பதிலளித்தான் விக்ரமாதித்தியன். விக்ரமாதித்தியனின் இப்பதிலைக் கேட்ட வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.

Previous Post Next Post